தமிழகம்

‘வருங்கால சட்டமன்றமே...’ - ஃபிளெக்ஸ் வைத்து சீட் கேட்கும் கடலூர் திமுக

ந.முருகவேல்

கடலூர் தொகுதி சிட்டிங் எம்எல்ஏ-வாக திமுக-வைச் சேர்ந்த கோ.ஐயப்பன் இருக்கிறார். இம்முறையும் தனக்கே கடலூர் கிடைக்கும் என இவர் நினைத்துக் கொண்டிருக்க, கடலூர் மாநகரச் செயலாளர் ராஜாவின் ராஜ விசுவாசிகள், அவரது பிறந்த நாளுக்கு, ‘வருங்கால சட்டமன்றமே’ என நாலா திசையிலும் ஃபிளெக்ஸ்களை வைத்து அய்யப்பன் தரப்பை அலறவிட்டிருக்கிறார்கள்.

இயல்பாகவே, அய்யப்பனுக்கும் ராஜாவுக்கும் அவ்வளவாய் ஒத்துப் போகாது. பொது வெளியிலேயே ஒருவரை ஒருவர் ‘போட்டுத்’ தாக்குமளவுக்கு நேசம். இதில் மாவட்ட அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் ஆசி தனக்கு இருப்பதால் கடலூரை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் ராஜா. அடுத்த முயற்சியாக கடலூருக்கு எம்எல்ஏ-வாகி விடவேண்டும் என்பதும் அவரது கனவு.

அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று (நவம்பர் 22) அவருக்கு பிறந்த நாள். இதற்காக கடலூர் மாநகர் முழுக்க அவருக்கு ஃபிளெக்ஸ் வைத்து புகழ்மாலை சூட்டி இருக்கும் அவரது விசுவாசிகள் அதில், ‘வருங்கால சட்டமன்றமே’ என அவரது விருப்பத்தையும் பெரிதாகப் போட்டு அவரை குஷிப்படுத்தி இருக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கடலூர் திமுக-வினர் சிலர், “கூட்டணியில திமுக-வுக்கு கடலூர் இருக்கா இல்லையான்னு கூட தெரியாம இப்படியெல்லாம் ஃபிளெக்ஸ் வைக்கிறது ரொம்ப ஓவருங்க. அமைச்சரோட ஆசி தனக்கு இருக்குன்றதால என்ன வேணும்னாலும் செய்யக் கூடாதுல்ல...” என்றனர்.

ஃபிளெக்ஸ் கதாநாயகர் ராஜாவிடம் கேட்டதற்கு, ““நாம வந்தா நல்லாருக்கும்னு தொகுதி மக்கள் விருப்பப்படுறாங்க போல... அதான் நம்ம மேல உள்ள பிரியத்துல அவங்களா இப்படி ஃபிளெக்ஸ் வெச்சிருக்காங்க.

மத்தபடி, யாருக்கு சீட்டுன்னு மாவட்டச் செயலாளரும் தலைமையும் தான் முடிவெடுப்பாங்க” என்றார். எம்எல்ஏ-வான அய்யப்பனோ, “புல்லைப் பார்த்தா பசு மாடும் மேயும்; எருமை மாடும் மேயும்கிறது இயல்பு தானே. எல்லாருக்கும் ஆசை இருக்கத்தானே செய்யும்” என்றார்.

SCROLL FOR NEXT