லாவண்யா தலைமையில் பிராது கட்டும் காங்கிரஸார்.
காங்கிரஸுக்கு 28 தொகுதிகளை திமுக இறுதி செய்திருந்தாலும் இன்னும் தொகுதிகள் எதுவென்று இறுதியாகவில்லை. அதற்குள்ளாக, ‘எங்க எம்எல்ஏ-வுக்கு சீட் கிடைக்கக் கூடாது’ என்று கொளஞ்சியப்பர் கோயிலில் பிராது கட்டும் அளவுக்குப் போயிருக்கிறது கடலூர் காங்கிரஸாரின் கோஷ்டி கானம்.
கடலூர் மாவட்ட காங்கிரஸில் விருத்தாசலம் எம்எல்ஏ-வான ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணியும், கடலூர் எம்பி-யான விஷ்ணு பிரசாத் தலைமையில் ஒரு அணியும் செயல்படுகிறது. அண்மையில் ராதாகிருஷ்ணனின் ஆதரவுபெற்ற லாவண்யா மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தான், ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் விருத்தாசலம் சீட் கிடைக்க வேண்டும் என லாவண்யா தரப்பும், கிடைக்கக் கூடாது என எதிர்தரப்பும் கொளஞ்சியப்பர் கோயிலில் பிராது கட்டி வழிபாடு நடத்தி அசரடித்திருக்கிறார்கள்.
விருத்தாசலத்தை அடுத்த மணவாளநல்லூரில் இருக்கிறது பழமையான கொளஞ்சியப்பர் கோயில். இங்கு முனியப்பர் சந்நிதி முன்பாக இருக்கும் சூலாயுதத்தில் தாங்கள் நினைத்ததை ஒரு சீட்டில் எழுதி பிராது கட்டினால் வேண்டுதல் பலிக்கும் என்பது நம்பிக்கை. அப்படித்தான் லாவண்யா தனது ஆதரவாளர்கள் சகிதம் சென்று பிராது கட்டி இருக்கிறார்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட எதிரணியைச் சேர்ந்த மாநில காங்கிரஸ் விவசாயப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெயகுரு, நேற்று தனது ஆதரவாளர்கள் சகிதம் கொளஞ்சியப்பர் கோயிலுக்குச் சென்று, ‘ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் சீட் கிடைக்கக் கூடாது’ என்று பிராது கட்டிவிட்டு வந்துள்ளார்.
இதுதொடர்பாக லாவண்யாவிடம் கேட்டதற்கு, ‘‘ராதாகிருஷ்ணனுக்கு தொகுதி மக்கள் மத்தியில் நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது. தொகுதிக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். அவர் மீண்டும் வந்தால் எஞ்சிய குறைகளையும் சரிசெய்வார். அதனால் மீண்டும் அவருக்கே தலைமை வாய்ப்பு வழங்க வேண்டும் என பிராது கட்டி வேண்டியிருக்கிறோம்” என்றார்.
ஜெயகுரு தலைமையில் பிராது கட்டும் காங்கிரஸார்.
ஜெயகுருவிடம் கேட்டதற்கு, “கடந்த 5 ஆண்டுகளில் ராதாகிருஷ்ணன் சொல்லிக் கொள்ளும்படியாக எதையும் செய்யவில்லை. திமுக-காரர்களை எதிர்த்து கேள்வி கேட்கக் கூட அஞ்சுகிறார். ‘தொகுதிக்கு சம்பந்தமில்லாத உங்களை இந்தத் தொகுதியில் ஜெயிக்க வைத்திருக்கிறோம் என்பதை எண்ணிப்பாருங்கள்’ என அவர்கள் பேசுவதைக் கூட இவர் தட்டிக் கேட்பதில்லை.
சொந்தக் கட்சிக்காரர்களுக்கு அரசு வேலைக்கோ, திட்டப்பணிகளுக்கோ சிபாரிசு கடிதம் கூட கொடுப்பதில்லை. அவர் உள்ளூர் காங்கிரஸ்காரர் அல்ல. அதனால், உள்ளூரைச் சேர்ந்த கட்சி நிர்வாகிக்குத் தான் சீட் கிடைக்கவேண்டும் என வேண்டி பிராது கட்டியிருக்கிறோம்” என்றார்.
ராதாகிருஷ்ணன் தான் விருத்தாசலத்தில் சொந்த வீடு வாங்கிவிட்டாரே, அப்புறம் ஏன், அவரை வெளியூர்காரர் என்கிறீர்கள்” என்று கேட்டதற்கு, “அவர் இங்கே வீடு வாங்கியிருக்கலாம். ஆனால், அவருக்கு இந்தத் தொகுதியில் ரேஷன் கார்டும் இல்லை, வாக்களிக்கவும் முடியாது” என்றார்.
‘பிராது’ வேண்டுதல் தொடர்பாக எம்எல்ஏ-வான ராதாகிருஷ்ணனிடமே பேசினோம். “அவரவர் ஆசைகள் நிறைவேறட்டும்னு நானே கொளஞ்சியப்பருக்கு சீட் எழுதிக் கட்டலாம்னு இருக்கேன். என்னைப் பொறுத்தவரை கடல் அளவே கிடைத்தாலும் மயங்கமாட்டேன்; கையளவே கிடைத்தாலும் கலங்கமாட்டேன் என்ற கொள்கையுடையவன். நடப்பதெல்லாம் நன்மைக்கே” என்றார் சிரித்துக் கொண்டே. ஆக மொத்தத்தில், அந்தக் கொளஞ்சியப்பர் காட்டில் ‘பிராது’ மழைதான்.