மதுரை: “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வந்தால் கொண்டாடுவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கருத்துகள் கூறுவது பற்றி தெளிவுபடுத்தி விட்டோம். இது போன்ற பேச்சு எங்கிருந்து வருகிறது எனத் தெரியவில்லை” என தவெக இணை செயலாளர் சி.டி.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பை ஆய்வு செய்ய கோரியும், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஒருங்கிணைந்து மதுரை மாவட்ட தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மாநில இணைச் செயலாளர் சி.டி.நிர்மல்குமார் தலைமை வகித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் நிர்மல்குமார் கூறியது: “சிபிஐ விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்க தயாராக உள்ளோம். இந்தியாவில் பெரிய சக்தியான எங்கள் தலைவருக்கு அனைத்து தரப்பில் இருந்து நெருக்கடி வரத்தான் செய்யும். இதையெல்லாம் கையாண்டு மக்களிடம் சென்று தேர்தலை சந்திப்பார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வந்தால் கொண்டாடுவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கருத்துகள் கூறுவது பற்றி தெளிவுபடுத்திவிட்டோம். இது போன்ற பேச்சு எங்கிருந்து வருகிறது எனத் தெரியவில்லை. நாங்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராகி வருகிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை.
எங்கள் தலைவரை முதல்வராக ஏற்றுக் கொண்டு வருபவர்களை ஏற்போம். எங்களுடன் வந்தால் மரியாதை, அதிகார பலமும், பதவியும் கொடுப்போம். 40% பேர் எங்கள் தலைவருக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.
ராகுல் காந்திக்கு உடன்பாடு இன்றியே திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தது என நாங்கள் எதுவும் பேசவில்லை. காங்கிரஸ் தலைவர்களை அவதூறாக பேசியது திமுக மாவட்ட செயலாளர் தளபதி, அமைச்சர் ராஜகண்ணப்பன் தான்.
பல்வேறு நெருக்கடிகளை தாண்டி தலைவர் விஜய் களத்தில் நிற்கிறார். 360 டிகிரி கோணத்தில் நெருக்கடி வந்தாலும் அதையெல்லாம் கையாண்டு மக்களை சந்திப்பதில் முதன்மையாக இருப்பார்.
தேவையான இடங்களில் பாஜகவை விமர்சிப்போம். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால் பிரதான எதிரி திமுகதான். களத்தில் இல்லாதவர்களை பற்றி பேசி என்ன பிரயோஜனம்?
30 கூட்டணிக் கட்சிகளை வைத்துக் கொண்டுள்ளது திமுக. விஜய்யின் தனிப்பட்ட காரணத்துக்காக வாக்கு சதவீதம் குறையாது. அவர் பிரச்சாரம் தொடங்கிய பிறகு 50 சதவீதமாக மாறும்.
திமுகவைப் போன்று போகிற போக்கில் தேர்தல் அறிக்கைகளை வெளியிடவில்லை. பட்ஜெட்டை வைத்து ஆறு சிலிண்டர் இலவசம், ரூ.2500 பணம் மற்றும் ஒரு பவுன் தங்க நகை வழங்கப்படும் என அறிவித்துள்ளோம். விஜயின் அடுத்த நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் விரைவில் நடக்கும்” என்றார் நிர்மல்குமார்.