சென்னை: கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக விவசாய சங்கங்கள் மற்றும் பாமக தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:
பாமக தலைவர் அன்புமணி: கூட்டுறவு சங்கங்களில் உழவர்கள் பெற்ற பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது முழுமையாக பயனளிக்காது என்றாலும் கூட விவசாயிகளுக்கு ஓரளவாவது பயனளிக்கக்கூடிய இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன்: தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருப்பவருக்கு 100 சதவீதமும், 5 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் கடனில் 50 சதவீதமும் கடன் தள்ளுபடி என்று தேர்தல் வாக்குறுதி கூறிவிட்டு, தற்போது விவசாயிகளை ஏமாற்றும் விதமாக இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் இரண்டரை ஏக்கர் கடன் பெற்றிருந்தாலே ரூ.91,250 வருகிறது. இதை முழுவதுமாக தள்ளுபடி செய்தால் மட்டுமே தான் விவசாயிகளுக்கு ஓரளவு கடனில் இருந்து மீள முடியும். எனவே, முதல்வர் விஜய், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன்: தமிழக அரசின் அறிவிப்பு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிக்கு முரணாக உள்ளது. வேளாண் உற்பத்தி செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு கட்டுப்படியான ஆதார விலையை அறிவிக்காத நிலையில் பெரும் பகுதி விவசாயிகள் கடனாளிகளாக மாறியுள்ளனர். எனவே, 5 ஏக்கருக்குட்பட்ட விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு பயிர்க்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகள் பெற்ற கூட்டுறவு பயிர் கடனில் 50 சதவீதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செய லாளர் பி.ஆர்.பாண்டியன்: இந்த அறிவிப்புகள் கடன் சுமையில் இருக்கும் விவசாயிகளை காப்பாற்ற உதவாது. மாநில அரசுகள் தனது நிதியில் இருந்து செயல்படுத்தும் கடன்தள்ளுபடி உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் பொருந்தாது என்பதை முதல்வர் உணரவேண்டும்.
கடந்த காலங்களை பின்பற்றிகடன் வசூல் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். நடப்பாண்டுக்கான புதிய கடன் வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்தி, நிதி ஆதாரங்களை பெருக்கிக் கொண்டு கடன் தள்ளுபடி நடவடிக்கையை தொடர வேண்டும். தற்போதைய அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.