தமிழகம்

“தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு” - கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

அ.அருள்தாசன்

நெல்லை: “தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசின் முழுமையான திறமையின்மையும், மக்கள் மீதான அக்கறையின்மையும்தான் இதற்கு காரணம்” என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் வீடு புகுந்து மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் மேரி ரெஜிலா (39) என்பவர் உயிரிழந்தார். அவரது கணவர் முத்துக்கிருஷ்ணன் (50), மகன் பிளஸெட் ராஜா (10) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். 2 பெண் குழந்தைகள் மாயமான நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த முத்துக்கிருஷ்ணன் மற்றும் அவரது மகன் பிளஸெட் ராஜா ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி எம்.பி., திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று பிற்பகலில் வந்து சிகிச்சை பெற்று வரும் முத்துக்கிருஷ்ணன் மற்றும் அவரது மகனை நேரில் சந்தித்து நலம் விசாரிதார்.

மருத்துவர்களிடம் அவர்களின் நிலைமை குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மேரி விஜிலா உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தந்தையையும், அவரது 10 வயது மகனையும் நேரில் பார்த்தேன் நெஞ்சே பதறுகிறது. அந்த பள்ளி சிறுவனின் கை விரல்கள் துண்டிக்கப்பட்டு மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளான். அவனது எதிர்காலம் இனி என்னவாகுமோ என்ற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது.

தந்தையின் உடலெங்கும் ஆழமான வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன குடும்பத்தின் தாயார் ஏற்கெனவே கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுவிட்டார். வீட்டிலிருந்த 2 பெண்களைக் கடத்தி சென்ற நிலையில் பின்னர்தான் மீட்கப்பட்டுள்ளனர். குற்றவாளி பிடிபட்டாரா இல்லையா என்பதே காலையிலிருந்து பெரும் குழப்பமாகவும், கேள்விக்குறியாகவும் உள்ளது. இப்படிப்பட்ட அவலநிலையில்தான் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 கொலை சம்பவங்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நாள்தோறும் இதுபோன்று கோரமான கொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குழந்தைகளுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்கதையாகி கொண்டிருக்கின்றன.

வீட்டில் இருந்தாலும் சரி, வீட்டை விட்டு வெளியே சென்றாலும் சரி, பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் எந்தவித பாதுகாப்பும் இல்லாத சூழல்தான் தமிழகத்தில் நிலவுகிறது.

நள்ளிரவில் யார் வேண்டுமானாலும் வீட்டுக்குள் புகுந்து தாயை கொன்று, தந்தையை வெட்டி, 10 வயது சிறுவனைச் சிதைத்து, பெண்களை தூக்கி செல்லும் அளவுக்கு குற்றவாளிகளுக்குத் துணிச்சல் வந்துவிட்டது என்றால் சாமானிய மக்கள் எங்கே போவார்கள். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எவ்வளவு மோசமாக சீர்குலைந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது” என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல்வாகப் எம்.எல்.ஏ, தூத்துக்குடி மேயர் ஜெகன், திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் கே.ராஜூ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT