தமிழகம்

152 மருத்துவ படிப்பு இடங்களை சரண்டர் செய்வதை தடுக்க தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

மு.சக்தி

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பணி மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்குரிய இடங்களில் சேருவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி என அழைக்கப்படும் ‘உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு’களுக்கான 152 காலி இடங்களை அகில இந்திய தொகுப்புக்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

2025-ம் ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 430 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில் உள்ள 215 இடங்கள் பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இந்த இடங்களில் 63 இடங்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு, இரண்டாவது கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், 152 இடங்கள் காலியாக இருந்தன. இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் மேற்கண்ட 152 இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு சரண்டர் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தமிழகத்தின் உரிமையை பறிப்பது மட்டுமின்றி, கிராமப் புறங்களிலும், மலைப் பகுதிகளிலும், பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும் பணிபுரியும் அரசு மருத்துவர்களின் உயர் படிப்பு கனவு பறிபோகும். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கட்டமைப்புக்கும், கிராமப்புற மக்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டுகிறது.

எனவே, தமிழக அரசு இப்பிரச்சனையின் அவசரத் தன்மையை கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைத்து 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களும் அகில இந்திய தொகுப்புக்கு சரண்டர் செய்யப்படுவதை தடுத்திடவும், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணி மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிற்குரிய இடங்களில் சேருவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது” என்று பெ.சண்முகம் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT