பெ.சண்முகம்
புதுச்சேரி: “தூய சக்தி நாங்கள்தான் என தமிழக முதல்வர் விஜய் சொல்வதற்கு நேர் எதிராக வாக்காளர்களுக்கு பணம் தரப்படுகிறது. இது தூய சக்தி அடையாளத்தை அழித்து ஒழிக்கிறது. இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்” என்று சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட்வேட்பாளர் சலீமை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் சண்முகம் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிக ஆண்டுகள் முதல்வராக இருக்கும் ரங்கசாமி அரசியல் நெறிமுறையற்ற நிலையில்தான் தொடர்ந்து இப்பதவியில் இருக்கிறார்.
புதுச்சேரி முன்னேற்றத்துக்கு ஏதும் அவர் செய்யவில்லை. மாநில அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்றக்கூட அவர் செயல்புரியவில்லை.
தமிழகத்தில் தேர்தல் ஆணையம் செயல்படவிலலை. எந்த தேர்தல் அதிகாரிகளையும் தொகுதியில் பார்க்கமுடிவதில்லை. இடைத்தேர்தலில் பணப்புழக்கம், விதிமீறல் இருக்கும் என அறிந்தும் அவர்கள் செயல்படவில்லை. தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் செயலற்ற தன்மையில் தேர்தல் ஆணையம் உள்ளது.
இதை பயன்படுத்தி தவெக, திமுக, அதிமுக ஆகியவை பணம் விநியோகம் செய்வதை மக்களே சொல்கிறார்கள். பணம் தராத ஒரே கட்சி கம்யூனிஸ்டுகள் தான். இதர மூன்று அணிகளும் தயக்கம், அச்சம் இன்றி பணம் விநியோகத்தில் ஈடுபடுகின்றனர்.
தூய சக்தி நாங்கள்தான் என தமிழக முதல்வர் விஜய் சொல்வதற்கு நேர் எதிராக வாக்காளர்களுக்கு பணம் தரப்படுகிறது. இது தூய சக்தி அடையாளத்தை அழித்து ஒழிக்கிறது. இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் பாஜக சொல்வது போல் ஆட்சி மாற்றம் வர வாய்ப்பு இல்லை. தேர்தல் ஆணையம் 13 கோடி மக்களின் வாக்குரிமையை பறித்தது. இந்நடவடிக்கை மூலம் மத்திய பாஜக அரசு விரும்பும் ஆட்சியை ஏற்படும் மோசடி ஆணையராக ஞானேஷ்குமார் செயல்பட்டது தெரியவந்துள்ளது.
தற்போது படிவம் மாற்றி பெயர் போதும் என்கிறார்கள். ஒரேயடியாக தாத்தா குறித்து விவரம் கேட்பதும், தற்போது தந்தை பெயர் கூட தேவையில்லை என்பதும் தவறானது. தகுதியானோரை மட்டும் சேர்க்க வேண்டும்.
பொதுத்தேர்தலில் பிரச்சாரம் அறிவித்து சென்றதை விட விஜய் ரத்து செய்த பிரச்சாரமே அதிகம்.
தவெகவுக்கு ஆதரவாக தேர்தல் களம் இல்லை. போட்டி கடுமையாக உள்ளதால் அக்கட்சியினர் தெருதெருவாக செல்கிறார்கள். பொறுப்பற்ற முறையில் ராஜினாமா செய்ததால் இவ்வேட்பாளர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவுள்ளது. தவெகவின் நெறிமுறையற்ற செயலால் திணிக்கப்பட்ட தேர்தல் இது” என்றார்.