தமிழகம்

மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையில் திருப்தி இல்லை என்பது திமுக தலைமைக்கும் தெரியும்: பெ.சண்முகம் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையில் திருப்தி இல்லை என்பது திமுக தலைமைக்கும் தெரியும் என, தொகுதி பங்கீடு குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் விளக்கமளித்துள்ளார்.

ரயில்வே துறையில் 30 ஆயிரம் பணியிடங்களை குறைக்கும் ரயில்வே வாரியத்தின் சுற்றறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டக் குழு சார்பில், கிண்டி ரயில் நிலையம் முன்பு கிளர்ச்சி பிரச்சாரம் நடைபெற்றது. கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமை தாங்கி, பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக அரசு வேலை வாய்ப்பின்மைக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் கூறியிருந்தார். அவரது பேட்டியை நான் நேரடியாக பார்க்கவில்லை. ஊடகங்களில் வந்ததை தான் பார்த்தேன். சட்டப்பேரவை தேர்தலில் இடது சாரி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை சம்பந்தமாக எங்களுக்கு திருப்தி இல்லை என்பதை, அப்போதே நான் வெளிப்படுத்தி இருக்கிறேன். அது திமுக தலைமைக்கும் தெரியும்.

தொகுதி உடன்பாடு ஏற்படுவதற்கு முன்பாக எங்களுக்கு இருந்த கருத்துக்கள் என்பது வேறு. ஆனால், அதன்பின் அனைவரும் ஏற்றுக்கொண்டு உடன்பாடு ஏற்பட்ட பிறகு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பாக பாடுபட்டிருக்கிறது. அந்த வகையில், இந்த அணியின் வெற்றி என்பது தான் எங்களுடைய எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்பை பூர்த்தி செய்யும் வகையில் வரும் மே.4ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

சமீபத்தில் வெளியான கருத்து கணிப்புகள் யாவும் கருத்து கணிப்புகள் அல்ல, அவை கருத்து திணிப்புகளாகும். ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களை யார் பணியமர்த்தினார்களோ, அவர்களை திருப்தி செய்யக் கூடிய வகையில் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT