சென்னை: திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், ‘நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுச் செயலாளர் பெ.சண்முகமும் இன்று (23-3-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாட்டில் 5 (ஐந்து) சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 சட்டப்பேரவைத் தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. எனவே இம்முறை அதனை விட கூடுதலாக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என அக்கட்சி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது.
ஆனால், திமுக தரப்பில் 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்ததால் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது. இறுதியில் இப்போது மார்க்சிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.