தமிழகம்

சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை உடனே அமல்படுத்த மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ​சா​திப் பெயர்​களை நீக்​கும் தமிழக அரசின் அரசாணை மீதான தடையை உயர் நீதி​மன்ற மதுரை கிளை நீக்​கி​யுள்​ளதை தொடர்ந்​து, அந்த அரசாணையை உடனே அமல்​படுத்த வேண்​டும் என்று மார்க்சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி வலி​யுறுத்​தி​யுள்​ளது.

இதுகுறித்து அக்கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் குடி​யிருப்பு பகு​தி​கள், தெருக்​கள், சாலைகள், நீர்​நிலைகள் மற்​றும் பிற பொது நிறு​வனங்​களின் பெயர்​களில் சாதிப் பெயர்​கள் இருக்​கக் கூடாது என்ற அடிப்​படை​யில் சமூக சீர்​திருத்த நோக்​கில் தமிழக அரசு கடந்த 2025-ம் ஆண்டு அரசாணை பிறப்​பித்​தது.

ஆனால் இந்த அரசாணையை எதிர்த்து உயர் நீதி​மன்​றத்​தில் தொடுக்​கப்​பட்ட வழக்​கில் தடை விதிக்​கப்​பட்​டது. சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை தற்​போது அந்த தடையை நீக்​கி, தமிழக அரசின் அரசாணை செல்​லும் என உத்​தர​விட்​டுள்​ளது.

இது வரவேற்​கத்​தக்​கது. தமிழகத்​தின் கிராமப்​புறங்​கள், நகர்ப்​புற குடி​யிருப்பு பகு​தி​களில் இன்​னும் சாதிப் பெயர்​கள் நீடித்​துக் கொண்டு தான் இருக்​கின்​றன.

விருதுநகர் மாவட்​டம், ஸ்ரீவில்​லிபுத்​தூர் தாலு​கா​வில் சாதி​யின் பெயரில் பரச்​சேரி என்ற கிராமமே உள்​ளது. இதன் பெயரை மாற்ற வேண்​டுமென அக்​கி​ராம மக்​கள் தொடர்ந்து போராடி வரு​கின்​றனர். ஆனால், இன்​னும் அந்த கிராமத்​தின் பெயர் மாற்​றப்​பட​வில்​லை.

இது​போன்ற ஏராள​மான கிராமங்​கள், நகர்ப்​புறங்​களில் சாதிப் பெயர்​களில் தெருக்​கள், சாலைகள் உள்​ளன. இத்​தகைய பெயர்​கள் மறை​முக​மாக சாதிய அடை​யாளங்​களை​யும், பிரி​வினை​களை​யும் ஊக்​கு​விப்​ப​தாகவே உள்​ளது.

எனவே, தமிழக அரசு சாதிப் பெயர்​களை நீக்​கும் அரசாணையை உடனடி​யாக அமல்​படுத்த வேண்​டும். தமிழகம் முழு​வதும் சாதி​களின் பெயரில் உள்ள கிராமங்​கள், குடி​யிருப்பு பகு​தி​கள், தெருக்​கள், சாலைகள் ஆகிய​வற்றை அடை​யாளங்​கண்டு அப்​பெயர்​களை நீக்​கி​விட்டு பொருத்​த​மான தலை​வர்​களின் பெயர்​களை சூட்ட வேண்​டும். இவ்​வாறு அவர் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT