தமிழகம்

புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடத்தை அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி முடிவு செய்க: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: வடசென்னை மக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்டக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், மின்ட் அருகே நேற்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், செய்தியாளர்களிடம் கூறியதாவது: போக்குவரத்து நெரிசலாலும், குடியிருப்பு நெருக்கடியினாலும், சுற்றுச்சூழல் பாதிப்பினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதியாகவே வட சென்னை இருந்து வருகிறது.

எனவே, வடசென்னை வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்களை உருவாக்குவதோடு, அதற்கான சிறப்பு நிதி ஒதுக்கீடுகளை மாநில அரசு செய்ய வேண்டும். தற்போது இருக்கக்கூடிய தலைமைச் செயலகம் கடுமை யான இடநெருக்கடியிலும், போக்குவரத்து நெரிசலிலும் சிக்கியிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், அரசு அலுவலகங்கள் நீண்டகாலத்துக்கான கட்டுமானங்களாக இருக்க வேண்டும். எனவே, இதுபோன்ற விஷயத்தில் அரசு அவசர கதியில் செயல்படக்கூடாது. புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படவுள்ள பட்டினப்பாக்கத்தில், அப்பகுதியைச் சுற்றியுள்ள மீனவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரம், சென்னைக்கு வெளியே தலைமைச் செயலகத்தை கொண்டு செல்வதும் பொருத்தமாக இருக்காது. எனவே, இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில், தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிகூட்டத்தை நடத்தி, அனைவரும் ஏற்கும் வகையில் பொருத்தமான இடத்தைக் கண்டறிய வேண்டும். அதுவரை, பட்டினப்பாக்கத்தில் எந்தவிதமான பணிகளையும் அரசு தொடங்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

பழனிசாமி அறிக்கை

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப் பட்ட பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய சாந்தோம் சாலையில், காலம் காலமாகவசித்து வரும் மீனவர்கள், பொது மக்களின் குடியிருப்புகள், பள்ளிகள், வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த நெருக்கடியான பகுதியாகும்.

கடுமையான நிதி நெருக்கடி, கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், கடன் வாங்கி ரூ.1,200 கோடி செலவு செய்து பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது.

தமிழகத்தின் நிதிநிலை சீரான பின்பு, போக்குவரத்து நெரிசலற்ற, மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட உத்தேசிக்கலாம். தற்போதைய நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தேவையற்றது. எனவே, இத்திட்டத்தை முதல்வர் விஜய் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT