மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம். உடன் திமுக கூட்டணிக் கட்சியினர். படம் எஸ். கிருஷ்ணமூர்த்தி

 
தமிழகம்

“பழனிசாமிக்கு பதவி ஆசை கண்ணை மறைக்கிறது” - மார்க்சிஸ்ட் சண்முகம் கடும் தாக்கு

என்.சன்னாசி

“அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு பதவி ஆசை மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. தமிழகத்தில் எப்படியாவது முதல்வர் நாற்காலியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் மாநிலஅரசுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்கள் அவரது கண்களை மறைக்கிறது” என, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடுமையாகச் சாடினார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றம் மற்றும் இதற்கு ஆதரவளிக்கும் அதிமுக-வை கண்டித்து மதுரை முனிச்சாலை சந்திப்பில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசியதாவது: 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தது முதலே 100 நாள் வேலை திட்டத்தை சீர்

குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அடுக்கடுக்கான நடவடிக்கையால் திட்டத்தைச் சிதைத்து, சீரழித்துள்ளனர். கடந்த டிச.18-ம் தேதி இத்திட்டத்துக்கு எதிராக புதிய சட்டத்தை இயற்றியுள்ளனர். காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு 75 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் மீதான வன்மம், வெறுப்பு மதவாதக் கும்பலுக்கு இன்னும் குறையவில்லை என்பதன் வெளிப்பாடுதான் இது.

கெட்ட நோக்கமே காந்தி பெயரிலுள்ள திட்டத்தை மாற்றுவதுதான். அடுத்து, ரூபாய் நோட்டிலும் அவரது பெயர், படத்தை நீக்குவர். தேசத்தின் விடுதலைக்காக உடல், பொருள், ஆவியை அர்பணித்த காந்தி, காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகே நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். 100 நாட்கள் வேலை நாட்கள் என்பதை 125 நாட்களாக மாற்றியுள்ளோம் என்கின்றனர். 100 நாள் இருந்தபோது, 25 நாட்கள் மட்டும் வேலை வழங்கினர்.

100 நாட்களுக்கு மத்திய அரசு சம்பளம் வழங்க வில்லை. எனவே, இவர்களால் 125 நாட்கள் வேலை வழங்க முடியாது. இது, பேப்பரில் மட்டும் எழுதப்பட்டுள்ளதே தவிர, நடைமுறைக்கு வராது. 100 சதவீதம் நிதி ஒதுக்கீடு இருந்தபோதே 100 நாள் வேலை வழங்கவில்லை. தற்போது 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் வழங்குமாம். நிதிச் சுமையால் மாநில அரசுகளால் வழங்காமல் போனால் மத்திய அரசும் வழங்காது. பிறகு எப்படி 125 நாட்கள் வேலை வழங்க முடியும்? மொத்தத்தில், கிராமப்புற ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் காரியத்தை புதிய சட்டம் மூலம் மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.

இத்தகைய மோசமான சட்டத்தை அதிமுக ஆதரிக்கிறது. பழனிசாமிக்கு பதவி ஆசை மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. தமிழகத்தில் எப்படியாவது முதல்வர் நாற்காலியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் மாநில அரசுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்கள் அவரது கண்களை மறைக்கிறது. மோடி அரசு தமிழகத்துக்கு எதிராக எதைச் செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது பழனிசாமியின் ஒரே கொள்கை. இதற்காகவே அதிமுக-வைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்.

உயர் நீதிமன்றமே உத்தரவிட்டாலும், அது மக்களின் ஒற்றுமைக்கும், மதநல்லிணக்கத்துக்கும் எதிராக இருப்பதால் ஒருபோதும் தீபம் ஏற்றும் தீர்ப்பை அமல்படுத்த முடியாது என்ற நிலைப்பாட்டை முதல்வர் எடுத்தார். ஏன் புதிதாக ஒரு தூணில் தீபம் ஏற்றவேண்டும் என நீதிபதி உள்ளிட்ட யாரும் காரணம் சொல்ல வில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT