மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் நிதியளிப்பு மற்றும் சிறப்பு பேரவைக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவை அடிமைப்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் செயல்படுவதுடன் 500 சதவீத வரி விதிக்கும் அமெரிக்க அரசை கண்டித்து கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர், கரூர், சென்னை உட்பட 10 இடங்களில் வரும் 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தங்களுக்கு எதிரானவர்களை, தங்களது வழிக்கு கொண்டு சாம, பேத, தான, தண்ட என்ற அனைத்து வழிமுறையை பாஜக கடைபிடிக்கிறது. வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சிபிஐ-யை தொடர்ந்து தணிக்கை துறையை ஆயுதமாக பயன்படுத்துகிறது. ஜனநாயகன் படக்குழுவுக்கு ஆதரவாக, தவெக தலைவர் விஜய் வாய் திறக்காமல் இருக்கிறார். பாஜகவை பகைத்து கொள்ளக்கூடாது என்பதற்காக விஜய் மவுனமாக இருக்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது.
திமுக தலைமையிலான அணியில் தொடர்கிறோம். கூட்டணிக்கு சில கட்சிகள் வர இருப்பதால், பேச்சுவார்த்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பாஜக, அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்போம்.
பிற கட்சி தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம். இதற்கு எடுத்துக்காட்டு கேரள மாநிலம். இது கொள்கை ரீதியான முடிவு. ‘ஆட்சியில் பங்கு’ என்ற முழக்கம் அதிகம் உள்ளது. தேர்தலுக்கு பிறகுதான், ‘ஆட்சியில் பங்கு’ என்ற சூழல் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தேர்தல் நிதியாக சண்முகத்திடம் மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் ரூ.12 லட்சம் வழங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.