தமிழகம்

“ஜெம் வீரமணி வழக்கில் சிறு தவறு நடந்தாலும் மக்களைத் திரட்டி இடதுசாரிகள் போராட்டம் நடத்தும்” - கே.பாலகிருஷ்ணன்

அ.முன்னடியான்

புதுச்சேரி: “ஜெம் வீரமணி வழக்கை உற்று நோக்கி வருகிறோம். சிறு தவறு நடந்தாலும், மக்களை திரட்டி இடதுசாரிகள் சார்பில் போராட்டங்களை நடத்துவோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சலீமை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் இன்று அத்தொகுதிக்குட்பட்ட சின்னையன்பேட் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகம், புதுச்சேரியில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இணைந்து தனியாக போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சலீமை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன். ஏற்கெனவே 5 ஆண்டுகள் ‘ஸ்டார் தொகுதி’ என பெயர் பெற்ற இந்த தொகுதியில், முதல்வராக ரங்கசாமி எம்எல்ஏவாக இருந்தாரே தவிர, மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவில்லை.

விலைவாசி உயர்ந்துள்ளது. மாநில அரசு கடனில் தத்தளித்து கொண்டிருக்கிறது. மத்திய அரசிடம் அதிக நிதியை பெறுவோம் என்றார்களே தவிர, எந்த நிதியையும் அவர்களால் பெற முடியவில்லை. மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்கும் தைரியம் கூட இல்லாதவராக ரங்கசாமியின் ஆட்சி நடைபெறுகிறது.

இந்தியாவையே உலுக்கிய போலி மருந்து குற்றச்சாட்டுகள் இன்றைக்கும் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட குற்றவாளிகளை கூட பாதுகாக்கும் அரசாக ரங்கசாமி அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் இந்திய கம்யூனிஸ்ட், வேட்பாளர் சலீம் வெற்றி பெறும்போது, சட்டப்பேரவையில் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பார். மாஹே எம்எல்ஏவுடன் இணைந்து சட்டப்பேரவையில் குரல் எழுப்புவார்.

தமிழகத்தில் தவெக ஆட்சியில் இந்த 5 மாதங்களில் நடைபெற்ற பல்வேறு காரியங்களை பார்த்தால், மீதமுள்ள காலத்தில் என்னவெல்லாம் நடக்குமோ என்று பயமாக உள்ளது. ‘சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு விட்டுக் கொடுங்கள்’ என்று ஒரு முதல்வர் கடிதம் எழுதுகிறார் என்றால், நாளைக்கு, ‘தமிழகத்தையே அம்பானிக்கு குத்தகை விடுங்கள்’ என்று ஏன் சொல்ல மாட்டார்?

தமிழகத்தில் தேர்தல் முடிந்த பிறகு தவெக ஆட்சியை, இடதுசாரிகளான நாங்கள் ஆதரிக்காவிட்டால் பாஜகவால் குடியரசு தலைவர் ஆட்சி வந்திருக்கும்.. தவெக அரசு தவறு செய்யும்போது, நிச்சயமாக அரசை எதிர்த்து உறுதியாக போராடுவோம். சட்டப்பேரவை தேர்தல் வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் வருகிறது என்றால், அப்போது பார்க்கலாம். இடைத்தேர்தலில் ஒரு கூட்டணியோடு சேர்ந்து போட்டியிட வேண்டிய அவசியம் கிடையாது. அதனால் தனியாக நாங்கள் களம் காண்கிறோம்.

20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி நடந்தாலும், ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி என்றால் அங்குள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியாமலா இது போன்ற குற்றங்கள் நடக்கின்றன?

அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது என்று சொன்னால், அனைத்து ஆட்சியாளர்களுக்கும் அடி வயிறு கலங்குகிறது. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால், நம்முடைய கதி என்ன ஆகுமோ என்று. ஜெம் வீரமணி வழக்கை உற்று நோக்கி வருகிறோம். சிறு தவறு நடந்தாலும், மக்களை திரட்டி இடதுசாரிகள் சார்பில் போராட்டங்களை நடத்துவோம் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT