மதுராந்தகம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுகந்தியை ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர்.
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தி, கடைக் கோடியில் உள்ள பகுதிகளுக்கும் போதிய பேருந்து போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என வாக்குறுதியளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மதுராந்தகம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பா.சுகந்தி நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன்படி, மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட ஜமீன் எண்டத்தூர், ஒழவெட்டி, சின்னவெண்மணி, அரியனூர், நீர்பெயர், வேட்டூர், குருவன்மேடு, சாலூர், நெசப்பாக்கம், தேவனூர், நாகமலை, வெட்டுக்காடு, வெள்ளாரை, நல்லூர், இரும்பேடு, தொண்ணாடு, பெரியவெண்மணி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
இதைத்தொடர்ந்து, தான் வெற்றி பெற்றால் கிராமப் பகுதிகளில் மிகவும் குறுகலான சாலைகளை விரிவுபடுத்தப்படும், விவசாயத்தையும் குடிதண்ணீரையும் பாதுகாக்க ஏரிகளும் நீர் வரத்துக் கால்வாய்களும் தூர்வாரப்படும், செங்கல்பட்டு மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களுக்கும் போதிய பேருந்து வசதி செய்து தரப்படும் என்றார்.
மேலும் 100 நாள் வேலையில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து சுகந்தி வாக்குகளை சேகரித்தார். அவரை கிராம மக்கள் மலர் தூவியும் மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். இதில், அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.