தமிழகம்

திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவு எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல: இந்திய கம்யூ.

மு.சக்தி

சென்னை: “திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியிருப்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான, அறிவியலுக்கு புறம்பான, சட்ட நடைமுறைகளுக்கு எதிரான உத்தரவு” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மதுரை அருகில் உள்ள திருப்பரங்குன்றத்தில் பாரம்பரிய மரபுப் படியும், நீண்ட கால வழக்கப்படியாகவும் மூன்று நாட்கள் முன்பு நவ.24-ம் தேதி தீபத் திருநாளில், மலை மீது இருக்கும் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் உள்ள தீபத்தூண் மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் ஆன்மிக விதிகளை பின்பற்றி செய்திருந்தது.

தமிழக அரசும் போதுமான பாதுகாப்பு வசதிகளையும், உதவிகளையும் செய்து கொடுத்தது. மதுரை மக்கள் மட்டும் அல்லாமல், கார்த்திகை தீபம் காண திரண்டு வந்த பக்கதர்கள் அனைவரும் சாதி, மத வேறுபாடுகளின்றி தீப தரிசனம் செய்து, சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டி, பாதுகாத்துள்ளனர்.

தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பு கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானதை கருத்தில் கொள்ளாமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்து உச்ச நீதிமன்றம் நாளை (நவ.28) அளவைக் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம் என்ற திசை வழியில் தீர்ப்பு அமைத்திருப்பது தமிழகத்தின் அமைதி நிலை மீது நடத்தும் நேரடித் தாக்குலாகும்.

மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து வாழ்ந்து சுமுக நிலையை சீர்கெடுக்கும் முறையில் திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் தர்காவுக்கு சொந்தமான இடம், முருகன் கோயிலுக்கான இடம் என எல்லை பிரித்து பேசுவது, மதத்தின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு துணை போகும் வாதமாகும். இது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

வழி வழியாக உள்ள அமைதியை பராமரித்து வந்த கோயில் அரங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவரை அறங்காவலராக நியமித்துள்ளதும், கோயில் மற்றும் தர்கா இரண்டுக்கும் பாதுகாப்பு என்ற பெயரில் மலை முழுவதுமான பாதுகாப்பை மத்திய பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டிருப்பது கூட்டாட்சி கோட்பாடுகளை தகர்க்கும் கருத்தாகும். அது, தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்கி சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பு சட்டத்தின் மதச்சார்பின்மை அடிப்படைகளை தகர்க்கும் வகையிலும், சமூக அமைதியை சீர்குலைத்து வரும் சட்டவிரோத சக்திகளுக்கு ஊக்கமூட்டும் வகையிலும் வழங்கியுள்ள தீர்ப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடுமையான கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறது.

திருப்பரங்குன்றம் வழக்கில் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான, அறிவியலுக்கு புறம்பான, சட்ட நடைமுறைகளுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT