சென்னை: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஓய்வுபெற்ற 46 ஆயிரம் பேருக்கு இடைக்கால ஓய்வூதியம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2003 ஏப்.1-ம் தேதிமுதல் பணியில் சேர்ந்து 2025 டிச.31-ம் தேதிவரை ஓய்வுபெற்ற உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் வரக்கூடிய ஊழியர்கள் 46 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் அவர்களுக்கு இடைக்கால ஓய்வூதியம் வழங்குவதற்காக கடந்த 2025 ஜூன் 16-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2026 ஜனவரி 1 முதல் இடைக்கால ஓய்வூதியமாக அவர்களுக்கு ரூ.10 ஆயிரம்வழங்கப்பட வேண்டும்.
ஆனால் ஓய்வுபெற்ற 46 ஆயிரம் பேருக்கும் இந்த இடைக்கால ஓய்வூதியம் இதுவரை வழங்கப்படவில்லை. ஓய்வூதியம் என்பது சலுகையல்ல; அது உரிமை.
தங்களது கடந்த காலஉழைப்பு சக்தியை இச்சமூகத்துக்கு வழங்கியவர்களுக்கு, சமூக பொருளாதார பாதுகாப்பை வழங்க வேண்டியது இந்த சமூகத்தின் கடமையாகும். ஊழியர்களின் கண்ணியமான வாழ்வுக்கு ஓய்வூதியம் அவசியம் எனவும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
எனவே தமிழக அரசு, 2003 ஏப்ரல் 1 முதல் பணியில் சேர்ந்து, 2025 டிச.31 வரை ஓய்வுபெற்ற அனைவருக்கும், இடைக்கால ஓய்வூதியமானரூ.
10,000-ஐ மாதந்தோறும் வழங்க வேண்டும் இத்துடன் இந்த பணியாளர்களில் உயிரிழந்த 7,864 பேரின் இணையர்களுக்கு குடும்ப ஓய்வூதியத்தை வழங்கவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.