தமிழகம்

பிஎம்ஸ்ரீ திட்டத்தை தவெக அரசு நிராகரிக்க முதல்வர் விஜய்க்கு இந்திய கம்யூ. வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக வெற்றிக் கழக அரசு உறுதியுடன் நிராகரிக்க வேண்டும்’ என்று முதல்வர் விஜய்க்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பாஜகவின் ஒன்றிய அரசு ‘இந்துத்துவா’ கருத்தியலையும், சமஸ்கிருதம், இந்தி மொழித் திணிப்பையும் உள்ளடக்கமாகக் கொண்ட பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஆரம்ப நிலையில் இருந்தே எதிர்த்து வருகிறது.

இந்தத் திட்டத்தை ஏற்க வேண்டும் என நிர்பந்தித்து வரும் ஒன்றிய அரசு, தமிழக அரசு செயல்படுத்தி வரும் சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்துக்கு நிதியை வழங்க மறுத்துவிட்டது. மாநில அரசின் சொந்த நிதிப் பொறுப்பில் கல்வித் துறை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஒன்றிய அரசு கடந்த 7-ம் தேதி பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்று கையெழுத்து போட வேண்டும் என தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசும் பிஎம்ஸ்ரீ திட்டத்தை உறுதியுடன் நிராகரிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம், தமிழ்நாடு முதல்வரை கேட்டுக் கொள்கிறது” என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT