சென்னை: “அமைதியும், நல்லிணக்க சூழலும் நிலவி வரும் தமிழ்நாட்டில் மோதல் அரசியலுக்கு விதை தூவும் ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும் என குடியரசுத் தலைவரை கேட்டுக் கொள்கிறேன்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்எஸ்எஸ் வழிநடத்தும் பாஜக ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரம் பெற்ற, ஆரம்ப நாளில் இருந்து மாற்று அரசியல் கருத்துடைய மாநில அரசுக்கு எதிரான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. குறிப்பாக ஆளுநர் மாளிகை வழியாக மாநில அரசுகளின் ஜனநாயகபூர்வ செயல்பாட்டிற்கு பல்வேறு இடையூறுகளை செய்து, மக்கள் நலனுக்கும், மாநில முன்னேற்றத்துக்கும் தடைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்காகவே குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் பயன் படுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் ஆளுநர் பொறுப்பில் இருந்து வரும் ஆர்.என்.ரவி, ஆரம்ப நாளில் இருந்தே அரசியலமைப்பு அதிகாரத்தை அத்துமீறி, தன்னிச்சையாக மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். ஆர்.என்.ரவி, அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட ஆளுநர் பொறுப்புக்கு எள்ளளவும் தகுதியற்றவர் என்பதை ஆதாரப்பூர்வமான சான்றுகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து குடியரசுத் தலைவரிடம் புகார் அளித்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஊக்கம் பெற்ற ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒரு மனதாக நிறைவேற்றிய சட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், கிடப்பில் போட்டு, இழுத்தடித்து, இறுதியில் அவைகள் செத்துப் போனதாக அவமதித்து வந்தார். தமிழ்நாடு அரசு முன்னெடுத்த சட்டப் போராட்டத்தின் மூலம் உச்ச நீதிமன்றம் ஆளுநர் அத்துமீறலை கடுமையாக விமர்சித்து, மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி முறையில் சட்டமன்றப் பேரவையின் அதிகாரத்துக்கும், மாநில அரசுக்கும் மேலான அதிகாரம் பெற்றவர் அல்ல ஆளுநர் என்பதை உறுதியாக தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று (20.01.2026) காலையில் கூடிய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உரையாற்றி, கூட்டத் தொடரை தொடங்கி வைக்க வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமன்றப் பேரவை வழிவழியாக பல பத்தாண்டுகளாக பின்பற்றி வரும் நல்மரபை உடைத்து சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பேரவைத் தலைவர், அவையின் மரபை எடுத்துக் கூறி, அவை மதிக்கப்பட வேண்டும் என விடுத்த வேண்டுகோளை நிராகரித்து, வழக்கம் போல வேகமாக வெளியேறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை, எதிர் கட்சியினரும் சொல்ல முடியாத, அடிப்படையும், ஆதாரமும் இல்லாத அரசியல் அவதூறுகளை அறிக்கையாக தொகுத்து வெளியிட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முழுமையாக நிராகரிக்கிறது. வன்மம் கொண்ட அறிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது.
சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் நலனை பேணுவதில் நாட்டிலுள்ள முதல் 5 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு பின் தங்கியிருப்பதாக ஆளுநர் கூறுவது குருட்டுத்தனமானது.
இருபதாண்டுகளாக செயல்பட்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நீக்கியதன் மூலம் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள சுமார் 2 கோடி தொழிலாளர்களின் சட்டபூர்வ வேலை பெறும் உரிமையை பறித்து விட்டு, மதவாத சக்திகளுக்கு உதவும் விபி ஜி ராம்ஜி திட்டத்தை அறிவித்துள்ள ஒன்றிய அரசை காப்பாற்றும் முயற்சியில் தரம் தாழ்ந்த, மலிவான அரசியலில் ஈடுபடும் ஆர்.என்.ரவி, ஒரு வினாடியும் ஆளுநர் மாளிகையில் இருக்க தகுதியற்றவர்.
அவரது வன்ம அரசியலை களத்தில் தமிழக மக்கள் முற்றாக முறியடிப்பார்கள். அமைதியும், நல்லிணக்க சூழலும் நிலவி வரும் தமிழ்நாட்டில் மோதல் அரசியலுக்கு விதை தூவும் ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும் என குடியரசுத் தலைவரை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், தமிழ்நாட்டின் தனித்துவம் வாய்ந்த பண்புகளையும், மரபுகளையும் பாதுகாக்க, ஜனநாயக நெறிகளையும், சட்டத்தின் ஆட்சி முறையினையும் பாதுகாக்க ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து செயல்பட முன் வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.