தமிழகம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு காலமானார்: தலைவர்கள் இரங்கல்

சென்னை மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானமாக வழங்கப்படுகிறது

செய்திப்பிரிவு

சென்னை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் ஆர்.நல்​லகண்ணு கால​மா​னார். இன்று மாலை முழு அரசு மரி​யாதைக்கு பிறகு, அவரது உடல் மருத்​துவ மாணவர்​களின் ஆராய்ச்​சிக்​காக சென்னை மருத்​து​வக் கல்​லூரிக்கு தானம் வழங்​கப்​படு​கிறது.

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் ஆர். நல்​ல​கண்​ணு. 101 வயதாகும் அவருக்கு சிறுநீரக கோளாறு, ரத்த அழுத்​தம் மற்​றும் உணவு விழுங்க முடி​யாத நிலை இருந்​த​தால் கடந்த 1-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். தீவிர சிகிச்சை பிரி​வில் இருந்த அவருக்கு பல்​வேறு மருத்​து​வத் துறை நிபுணர்​கள் கண்​காணிப்​பில் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்​தது. கடந்த 23-ம் தேதி அவரது உடல்​நிலை​யில் மிகப்​பெரிய பின்​னடைவு ஏற்​பட்​டது. உடல்​நிலை மிக​வும் மோசமடைந்​ததை தொடர்ந்து நேற்று பகல் 1.55 மணிக்கு நல்​ல​கண்ணு கால​மா​னார்.

          

இதையடுத்து அவரது உடல் மாலை 5 மணிக்கு சென்னை தி.நகர் செவாலியர் சிவாஜி கணேசன் சாலை​யில் உள்ள இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி அலு​வல​க​மான பாலன் இல்​லத்​தில் அஞ்​சலிக்​காக வைக்​கப்​பட்​டது. பொது​மக்​கள், கட்​சி​யினர், பல்​வேறு அரசி​யல் கட்​சிகளை சேர்ந்​தவர்​கள், குடும்​பத்​தினர், உறவினர்​கள், நண்​பர்​கள் என ஏராள​மானோர் நல்​ல​கண்ணு உடலுக்கு அஞ்​சலி செலுத்தி வரு​கின்​றனர்.

இன்று பிற்​பகல் 3 மணிக்கு பிறகு, நல்​ல​கண்​ணு​வின் விருப்​பப்​படியே அவரது உடல் ஊர்​வல​மாக கொண்டு செல்​லப்​பட்டு மருத்​துவ மாணவர்​களின் ஆராய்ச்​சிக்​காக, சென்னை சென்ட்​ரலில் உள்ள சென்னை மருத்​து​வக் கல்​லூரிக்கு (எம்​எம்​சி) - ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனைக்கு தானம் வழங்​கப்​பட​வுள்​ளது. கடந்த டிசம்​பர் 26-ம் தேதி நல்​ல​கண்ணு தனது 101-வது பிறந்த நாளை கொண்​டாடி​னார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

நல்லகண்ணுவின் மறைவையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் அடுத்த 7 நாட்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் 3 நாட்களுக்கும் துக்கம் அனுசரிக்கும் விதமாக கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்லகண்ணுவின் மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசு துணைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளி​யிட்ட எக்ஸ் வலை​தளப் பதி​வில், “மதிப்​புக்​குரிய நல்​லக்​கண்​ணு​வின் மறைவு செய்தி கேட்டு ஆறாத் துயரமடைந்​தேன். அவரது தி​யாகங்​கள் நிறைந்த போ​ராட்ட வாழ்வு மக்​கள்​ மனதில்​ என்​றும்​ நிலைத்​திருக்​கும்​” என்​று தெரிவித்​துள்ளார்​.

பிரதமர் மோடி: மறைந்த நல்லகண்ணு, அடித்தட்டு மக்களுடனான தொடர்புக்காகவும், உரிமை மறுக்கப்பட்டோர், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் முயற்சிகளுக்காகவும் நினைவுகூரப்படுவார். சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களாலும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். அவரது எளிமையும் அதே அளவுக்கு குறிப்பிடத்தக்கது. எனது எண்ணங்கள் யாவும் அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுடன் இருக்கும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி: நல்லகண்ணுவின் வாழ்க்கை நேர்மை, எளிமை மற்றும் ஏழை, எளிய மக்களுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு ஓர் அரிய எடுத்துக்காட்டாகும். கிட்டத்தட்ட 9 தசாப்தங்களாக, அவர் நீதி மற்றும் கண்ணியத்துக்காக உறுதியுடன் நின்றார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

முதல்வர் இரங்கல்: தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று வெளி​யிட்ட இரங்​கல் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

முதுபெரும் தலை​வர் நல்​ல​கண்​ணு மறைவுற்​றார் என்ற செய்தி நம்​மையெல்​லாம் கடும் துயரத்​துக்கு ஆளாக்​கி​யுள்​ளது. நம் சம காலத்​தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி. நாட்​டின் விடு​தலைக்​காக, பாட்​டாளி வர்க்​கத்​தின் நலனுக்​காக தம் இனிய வாழ்​வின் பெரும்​பகு​தியை ஈகம் செய்த தியாக பெருஞ்​சீலர். கொள்கை கனல் அகத்​துள் தீயாய் மூண்டு தகிக்க, முகத்​திலே புன்​னகை​யுடன் அமை​தி​யாக வலம் வந்த அரசி​யல் எரிமலை அவர். கருணாநி​தி​யுடன் என்​றென்​றும் இனிய நட்பை பூண்​டிருந்​தவர். கருணாநிதி தமது ஆட்​சிக் காலத்​தில், நல்​ல​கண்​ணுவுக்கு அம்​பேத்​கர் விருது வழங்கி சிறப்​பித்​தார். திமுக அரசின் சார்​பில் அவருக்கு தகை​சால் தமிழர் விருது வழங்​கும் வாய்ப்பு பெற்​றது எனது பெரும்​பேறு.

நல்​ல​கண்ணு வாழ்ந்த காலத்​தில் நாம் வாழ்ந்​தோம் என்​பது நமக்கு பெரு​மை. அவர் பெற்ற விருதுகள், பரிசுகள் எவை​யா​னாலும், அவற்​றோடு தொகை அனைத்​தை​யும் கட்​சிக்​காக​வும், மக்​கள் நலனுக்​காக​வும் அரசிடம் ஒப்​படைத்த அப்​பழுக்​கற்ற தலை​வர் அவர். தான் வேறு, இயக்​கம் வேறு என்று பிரித்து பார்க்​காமல், இயக்​கத்​துக்காக இயக்​க​மாகவே வாழ்ந்​தவர் என்று அவரது நூற்​றாண்டு விழா​வில் நான் குறிப்​பிட்​டது இன்​றும் நினை​வலைகளாக வந்து என் நெஞ்​சில் மோதுகிறது.

நல்​ல​கண்ணு மறை​வால் வாடும் அவரது குடும்​பத்​தினர், உறவினர்​கள் மற்​றும் இந்​திய கம்​யூனிஸ்ட் இயக்​கத் தோழர்​கள் அனை​வருக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கலும், ஆறு​தலும். மறக்க முடி​யாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டு சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும். பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லா தோழர் நல்லகண்ணுவின் நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும். தமிழகத்தின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT