மு.வீரபாண்டியன்
கோவை: அம்பாசமுத்திரத்தில் சீமான் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவு அளிப்பது பற்றி கட்சி முடிவு செய்யும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “தவெக அரசு மதச்சார்பின்மையில் உறுதியாக இருக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக மாறாமல், உழைக்கும் மக்களுக்கான அரசாக செயல்பட வேண்டும். தவெக அரசுக்கு அளித்துள்ள ஆதரவு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. நல்லாட்சி, நல்ல திட்டங்கள், நல்ல கொள்கைகளை செயல்படுத்த ஒருநாள் போதும்.
ஆனால், உழைக்கும் மக்களின் கோரிக்கைகள் இன்னும் அப்படியே உள்ளன. விவசாயக் கடன் தள்ளுபடி, தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீதான கைது நடவடிக்கைகள் சட்டப்பூர்வமாக இருக்க வேண்டும். தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரம் இருக்கிறது என்பதற்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது. தங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பவர்களை குறிவைக்கும் மத்திய அரசின் அணுகுமுறையை மாநில அரசு பின்பற்றக் கூடாது.
அம்பாசமுத்திரம் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிகமான கிளைகள் உள்ளன. அம்பாசமுத்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டால், அவருக்கு ஆதரவு அளிப்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். இடைத்தேர்தல் அறிவிக்கட்டும். அதன்பிறகு அதுபற்றி கட்சி முடிவு செய்து அறிவிக்கும்” என்று அவர் கூறினார்.