சென்னை: நேருவையும், மோடியையும் ஒப்பிட்டுப் பார்ப்பதே மிகப்பெரிய மோசடி. பாஜகவை எதிர்த்து நாடு முழுவதும் பேரணியாகச் சென்று மக்களை சந்திக்க உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜகவை எதிர்த்து அகில இந்திய அளவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆக.6 முதல் 15-ம் தேதி வரை அனைத்து மாநிலங்கள், மாவட்டங்களில் பேரணியாகச் சென்று மக்களை சந்திக்க உள்ளோம். நாட்டின் நிலைமையை விளக்கி, மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட உள்ளோம்.
பிரதமர் மோடி ஆட்சியில் பின்பற்றி வருகிற கொள்கைகளெல்லாம் மக்களுக்கு எதிரானவை. பிரதமர் நரேந்திர மோடி நேருவையே மிஞ்சிவிட்டார், நேருவுக்கு பின்னுக்கு தள்ளி இவர் முன்னுக்கு போகிறார் என்ற அளவுக்கு பாஜக பிரச்சாரம் செய்கிறது. நேருவையும், மோடியையும் ஒப்பிட்டுப் பார்ப்பதே மிகப்பெரிய மோசடியாகும்.
இண்டியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை பாஜகவை முறியடிப்பதற்கான முறையாக வலுவடைய வேண்டும். காங்கிரஸ் கட்சி தற்போது மாநிலக் கட்சிகளை, இடதுசாரிக் கட்சிகளை, உரிய வகையில் மதிப்பளிக்க வேண்டும். அவர்களோடு நம்பகத்தன்மையோடு செயல்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.