மு.வீரபாண்டியன்

 
தமிழகம்

செயற்கை நுண்ணறிவு மூலம் தலைவர்களை அவமதிக்கும் போக்கு: இந்திய கம்யூ. கண்டனம்

தமிழினி

சென்னை: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்தை அவமதிக்கும் வகையில் சித்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டின் மதிப்பு மிக்க அரசியல் தலைவராக வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கண்ணியத்தை சிதைத்து, அவமதிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அவரது திருவுருவப் படத்தை மிக மோசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த அநாகரீகமான பதிவைக் கண்டவர்கள் எவரும் கண்டனம் செய்யாது இருக்க முடியாது. கருணாநிதியின் கண்ணியத்தை சிதைக்கும் அற்பத்தனமான பதிவுக்கு எதிர்வினையாக, தமிழ்நாடு அரசின் முதல்வர் விஜய்யை அநாகரிகமாக சித்தரிக்கும் பதிவுகளும் சமூக ஊடகங்களில் உலாவி வருகின்றன. அறிவியல் தொழில்நுட்பத்தின் நிகழ்கால உச்சமாக வளர்ந்திருப்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாகும்.

இதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை தடுப்பது எப்படி? என்ற வினாவிற்கு விடை தேடி, உலக நாடுகளும், அறிஞர்களும் விவாதித்து வருகின்றனர். இந்த அற்புதமான தொழில்நுட்பத்தை, சமூகம் மதித்து போற்றி வரும் அரசியல் தலைவரான, எழுத்தும் பேச்சும் ஒரு சேர கைவரப்பெற்று திகழ்ந்தவரான, நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களால் “சிறந்த ராஜியவாதி” என ஏற்றுக் கொள்ளப்பட்டவரான, சமூகநீதி ஜனநாயக நெறியில் நின்று அரசு நிர்வாகத்தை முன்னெடுத்த திறன் மிக்க அரசுத் தலைவராக வாழ்ந்தவருமான கருணாநிதி போன்ற, போற்றுதலுக்குரிய மனிதர்களையும், உயர் பொறுப்பில் உள்ளோரையும் இழிவுபடுத்துவது அறிவுடையோர் செய்யும் செயலாகாது.

இது போன்ற அநாகரீகமான குற்றங்கள் நேரும்போது, சமூகம் ஒட்டுமொத்தமாக இணைந்து கண்டிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பிறரை இழிவு படுத்தும், தரம் தாழ்ந்தச் செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT