செங்கல்பட்டு: முதல்வரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் - அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு செங்கை குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதில் இருதரப்பினருக்கும் முக்கியமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதால் வழக்கு புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அனுமதி வழங்கியது.
தனது சார்பில் ஆஜராகும் வழக்கறிஞருக்கு அதிகாரம் வழங்கியிருப்பதை விஜய் ஆன்லைன் வாயிலாக நீதிமன்றத்தில் தோன்றி உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
மறுபுறம், சங்கீதா தரப்பில் இதுவரை வக்காலத்து மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தேவையான முக்கிய மனு இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த மனுவை தாக்கல் செய்ய சங்கீதாவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அவர் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் யார் என்பதை உறுதிப்படுத்த நீதிபதி அறிவுறுத்தினார். இந்த வழக்கின் விசாரணை ஆக. 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.