சென்னை: அரசு விவகாரங்களில் உரிய காலத்துக்குள் மேல்முறையீடு செய்யாமல் காலதாமதம் செய்யும் அதிகாரிகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை ரகசிய விசா ரணை நடத்த அறிவுறுத்த வேண்டும் என தலைமைச் செயலருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சென்னை முகப்பேரில் சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட தங்களுக்கு சொந்தமான 27 சென்ட் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை எனக்கூறி தனியார் பள்ளி அறக்கட்டளை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது அந்த பள்ளி பொது சாலையை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பியிருந்ததால் அதை அகற்றி அப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நிலத்தை அளந்து எல்லையை வரையறை செய்ய உத்தரவிட்ட தனி நீதிபதி, ஒருவேளை அந்த பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் சாலை அமைக்கப்பட்டு இருந்தால் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அரசுக்கு கடந்த 2021-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து 4 ஆண்டுகள் காலதாமதமாக சென்னை மாநகராட்சி தரப்பில்மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களையும், கோப்புகளையும் மற்ற துறை அலுவலர்களிடமிருந்து பெற தாமதம் ஏற்பட்டதால் மேல்முறையீடு செய்ய காலதாமதம் ஏற்பட்டது என்றும், எனவே 1,421 நாட்கள் தாமதத்துடன் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க வேண்டுமென்றும் அனுமதி கோரப்பட்டது.
ஆனால் அரசின் இந்த காலதாமதமான மேல்முறையீட்டுமனுவை ஏற்க மறுத்த தலைமைநீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்குப் பின்பு பிறப்பித்த உத்தரவு: அரசின் கோப்புகளை கையாளும் அதிகாரிகள் சோம்பேறிகளாக மாறிவிட்டனர்.
அரசு தொடர்பான இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 1,421 நாட்கள் தேவைப்பட்டுள்ளது. இதுபோன்ற தாமதங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
பல மேல்முறையீட்டு மனுக்கள் நொண்டி சாக்குகளைக்கூறி அதிக காலதாமதமாக தாக்கல் செய்யப்படுகின்றன. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மெத்தனப்போக்குடன் கூடிய அலட்சியம் காரணமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் எதிர்தரப்புடன்கூட்டணி அமைத்து உடந்தையாக செயல்பட்டு இருக்க வேண்டும்.
எனவே இதுபோன்ற அரசு விவகாரங்களில் உரிய காலத்துக்குள் மேல்முறையீடு செய்யாமல் காலதாமதம் செய்யும் அதிகாரிகள் குறித்து லஞ்சஒழிப்புத் துறை ரகசிய விசாரணை நடத்த அரசின்தலைமைச் செயலர் அறிவுறுத்தவேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்க மறுத்து நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.