சென்னை: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அரசு இணைச் செயலரான எஸ்தர் ராணி மீதான நில அபகரிப்பு வழக்கில், 6 மாதங்களில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது, இது தொடர்பாக, சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்த வி.முத்துகுருசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ``சென்னை, தண்டையார்பேட்டை, கும்மாளம்மன் கோயில் தெருவில் நானும், எனது நண்பரான செல்வராஜூம் இணைந்து ஒரு கிரவுண்டு நிலத்தை விலைக்கு வாங்கினோம். செல்வராஜ் திடீரென இறந்து விட்ட நிலையில், அவரது மனைவி கிறிஸ்டினாவும், நானும் அந்த நிலத்தை பிரித்துக் கொள்ள ஒப்பந்தம் செய்தோம்.
ஆனால் கிறிஸ்டினா, அவரது மகன் ஹெப்பின் பால், ராயபுரத்தைச் சேர்ந்த சாந்தி ஆகியோர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் இணைச் செயலராக பதவி வகிக்கும் அதிகாரி எஸ்தர் ராணியின் துணையுடன், சென்னை மாநகராட்சி பொறியாளரை மிரட்டி போலியான ஆவணங்கள் மூலம், எனக்கு சேர வேண்டிய நிலத்தையும் அபகரிக்க முயன்றனர்.
இது தொடர்பாக, நான் அளித்த புகாரின்பேரில் கிறிஸ்டினா, அதிகாரி எஸ்தர் ராணி உள்ளிட்டோர் மீது காசிமேடு போலீஸார் கடந்த 2024-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தும் மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்தவில்லை.
எனவே, இந்த வழக்கில் விரைவாக விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். பூபதி, தமிழக அரசின் உயரதிகாரியான எஸ்தர்ராணி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அழுத்தம் கொடுத்து வருவதால் மனுதாரர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது, வழக்கை வாபஸ் பெறக்கோரி மிரட்டல்களும் வருவதாக வாதிட்டார்.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் லியோனார்டு அருள் ஜோசப் செல்வம், ``இந்த வழக்கில் விசாரணை முடிவடையும் தருவாயில் உள்ளது. 6 மாதங்களுக்குள் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும்'' என்றார்.
இந்த விவாதங்களை கேட்ட நீதிபதி, ``இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீதான விசாரணையை விரைவாக முடித்து, 6 மாத காலத்துக்குள் இறுதி விசாரணை அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.