தமிழகம்

அரசுத் துறைகளில் ஒப்பந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை: நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: அரசின் பல்​வேறு துறை​களில் நடை​பெற்ற பல கோடி ரூபாய் மதிப்​பிலான ஒப்​பந்த முறை​கேடு​கள் குறித்து விசா​ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

விழுப்​புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த வீரப்​பன் என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது: அரசின் பல்​வேறு துறை​களில் மேற்​கொள்​ளப்​படும் உள்​கட்​டமைப்பு ஒப்​பந்​தங்​கள் தொடர்​பாக தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின்​கீழ் பல்​வேறு தகவல்​களை பெற்​ற​தில், போலி ஆவணங்​கள் மூலம் குறிப்​பிட்ட நிறு​வனங்​களுக்கு முறை​கே​டாக ஒப்​பந்​தங்​கள் ஒதுக்​கப்​பட்​டதும், இதன்​மூலம் அரசுக்கு கோடிக்​கணக்​கில் நிதி இழப்பு ஏற்​பட்​டதும் தெரிய​வந்​துள்​ளது.

குறிப்​பாக, கடந்த 2022-ம் ஆண்டு முதல் சென்னை சிஐடி நகர், முகப்​பேர் வீட்​டு​வசதி வாரிய கட்​டு​மானப் பணி, சென்னை எண்​ணூர் பகு​தி​யில் கொசஸ்​தலை ஆற்​றின் முகத்​து​வாரம் தூர்​வாரும் பணி என 12-க்​கும் மேற்​பட்ட அரசின் பல்​வேறு துறை​களின் உள்​கட்​டமைப்பு பணிக்​கான ஒப்​பந்​தங்​கள் சில தனி​யார் நிறு​வனங்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்​ளன.

இந்த நிறு​வனங்​கள் அதி​காரி​களு​டன் கூட்​டணி அமைத்​து, வேறு எந்த நிறு​வனத்​துக்​கும் ஒப்​பந்​தங்​கள் சென்​று​வி​டாத​படி முறை​கேடு செய்​துள்​ளன. இதுகுறித்து கடந்த 2025 ஆகஸ்​டில் நீர்​வளம், பொதுப்​பணி, லஞ்ச ஒழிப்​புத் துறை அதி​காரி​களிடம் புகார் கொடுத்​தும் எந்தநடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை.

எனவே, இது தொடர்​பாக விசா​ரிக்க லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு உத்​தர​விட வேண்​டும் என்று கோரி​யிருந்​தார். நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்பு இந்த மனு மீதான விசா​ரணை நடந்​தது.

அப்​போது மனு​தா​ரர் தரப்​பில், ‘‘போலி ஆவணங்​கள், சான்​றிதழ்​கள் மூலம் பெறப்​பட்ட ஒப்​பந்​தங்​களால் அரசுக்கு கோடிக்​கணக்​கில் இழப்பு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது’’ என்று வாதிடப்​பட்​டது.

அரசு தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘மனு​தா​ரர் அளித்​துள்ள புகார் தொடர்​பாக விசா​ரணை நடத்த தமிழக அரசின் பொதுப்​பணித் துறை தலை​மைப் பொறி​யாளர் கடந்த மே 26-ம் தேதி ஒரு குழு அமைத்​துள்​ளார்.

அந்த குழு இது தொடர்​பாக விசா​ரணை நடத்தி வரு​கிறது’’ என்​றார். இதையடுத்து நீதிப​தி, ‘‘அந்த குழு 8 வாரத்​தில் விசா​ரணை நடத்​தி, அது தொடர்​பான விவரங்​களை லஞ்ச ஒழிப்​புத் துறை​யிடம் அறிக்​கை​யாக தாக்​கல் செய்ய வேண்​டும்.

அதன் அடிப்​படை​யில் லஞ்ச ஒழிப்​புத் துறை அதி​காரி​கள் வி​சா​ரணை நடத்​தி, சட்​டப்​படி நடவடிக்கை எடுக்க வேண்​டும்​’’என்​று உத்​தர​விட்​டு வழக்​கை முடித்​து வைத்​தார்​.

SCROLL FOR NEXT