சென்னை: திருநீர்மலையில் புறம்போக்கு நிலத்தில் குட்டையை நிரப்பி கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களை இடிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவி்டப்பட்டுள்ளது.
சென்னை திருநீர்மலையை அடுத்த திருமங்கையாழ்வார்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஓ.உதயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “திருநீர்மலையில் அரசு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் பல ஆண்டுகளாக குவாரி குட்டை உள்ளது.
தற்போது தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம், குட்டையை மண், கட்டிட இடிபாடுகளைக் கொண்டு நிரப்பி 5 வணிக வளாகங்களையும், பொது கழிப்பறைகளையும் கட்டியுள்ளது. மழைக்காலங்களில் இப்பகுதியில் தண்ணீர் தேங்காதபடி மழைநீர் இந்த குட்டைக்குத்தான் செல்லும்.
தற்போது குட்டையை மூடி விட்டதால் அப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் குடியிருப்புகளின் அருகே கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறைகளால் அப்பகுதியில் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
எனவே குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள் மற்றும் பொது கழிப்பறைகளை இடித்து அகற்றிவிட்டு, அந்த இடத்தை பழைய நிலைக்கு மீட்டுருவாக்கம் செய்ய தாம்பரம் மாநகராட்சிக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.சுரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தமிழக வருவாய் துறை, தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.