மதுரை: தஞ்சாவூரில் 8 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் குற்ற வழக்காமல் வேலை வாய்ப்புகளை இழந்த இளைஞர் ஒருவருக்கு தமிழக அரசு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரைச் சேர்ந்தவர் சரத்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் உட்பட 5 பேர் வழிப்பறி செய்யும் நோக்கத்துடன் பதுங்கியிருந்ததாக எங்கள் மீது மதுக்கூர் போலீஸார் 2017-ல் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 8 ஆண்டுகளாக போலீஸார் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் உள்ளனர். எனவே வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், “இந்த வழக்கால் மனுதாரரால் இந்தியாவிலும், வெளிநாடுகளுக்கும் வேலைக்கு செல்ல முடியவில்லை. குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
எந்த ஆதாரமும் இல்லாமல் யூகத்தில் அடிப்படையில் மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நிலையிலேயே உள்ளது. இதனால் மனுதாரர் மற்றும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டது.
தஞ்சாவூர் எஸ்பி தாக்கல் செய்த பதில் மனுவில், ‘மனுதாரர் மீதான வழக்கு பதிவு செய்த நாளிலிருந்து மதுக்கூர் காவல் நிலையத்தில் 10 காவல் ஆய்வகாளர்கள் பணியில் இருந்துள்ளனர். இருப்பினும் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட 10 காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘குற்றம் புரியும் நோக்கத்துடன் சிலர் கூடியிருந்ததாக வழக்கு பதிவு செய்யும்போது அதை நிரூபிக்க ஆதாரங்கள் இருக்க வேண்டும். இந்த வழக்கில் அதுபோன்ற எந்த ஆதாரமும் இல்லை.
போலீஸார் எட்டு ஆண்டுகளாக விசாரணை நடத்தாமலேயே உள்ளனர். 2017-ல் பதிவு செய்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை 24.6.2025-ல் தான் நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர்.
இது பொய் வழக்கு என்பது தெரிகிறது. இதனால் வழக்கு ரத்து செய்யப்படுகிறது. வழக்கை ரத்து செய்வதால் மட்டும் மனுதாரருக்கு நீதி கிடைக்காது. இந்த வழக்கால் மனுதாரர் 8 ஆண்டுகளாக வேலை வாய்ப்புகளை இழந்துள்ளார். சமூகத்தில் நற்பெருமையுடன் வாழும் உரிமையை இழந்துள்ளார்.
இதனால் மனுதாரருக்கு 3 மாதத்தில் அரசு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இப்பணத்தை சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம் இருந்து அரசு திரும்ப வசூலிக்கலாம்’ என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.