வலது: கயல்விழி | கோப்புப் படம்
சென்னை: எஸ்பிஐ வங்கி மேலாளரை அறைந்ததாக மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடையார் எஸ்.பி.ஐ. வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்ததாக மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தனக்கெதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி கயல்விழி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், வங்கி மேலாளர் தான் தம்மை தகாத வார்த்தைகளால் திட்டியதை மறைத்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கயல்விழி தரப்பில் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மனுவை வாபஸ் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, வழக்கின் இறுதி அறிக்கையை நான்கு வாரங்களில் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சாஸ்திரி நகர் காவல் நிலையத்தினருக்கு உத்தவிட்டார்.