அன்பில் மகேஸ்
கோப்புப் படம்
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில், அன்பில் மகேஸ், முத்துக்குமார் உள்ளிட்ட 3 பேரையும் இன்று காலை 11 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் போலீஸாருக்கு அனுமதி அளித்துள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக்கூறி ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் மற்றும் அவரது மேலாளரான சரவணன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், மீண்டும் மூவரையும் ஒன்றாக 2 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினார். இந்த மனு மீது இன்று (நவ.25) உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்து மூவரையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ், முத்துக்குமார், சரவணன் ஆகிய 3 பேரையும் மீண்டும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி போலீஸுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
அதன்படி, இன்று காலை 11 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு, ஏற்கனவே விதித்த அனைத்து நிபந்தனைகளும் அடங்கும் என தெரிவித்துள்ளார்.