தமிழகம்

ராமதாஸ் தொடர்ந்த வழக்கு: அன்புமணி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனு குறித்து அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாமக நிறுவனரான ராமதாஸுக்கும், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் கட்சியினர் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் பாமகவுக்கு சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், ராமதாஸ் தனது மகள் காந்திமதியை செயல் தலைவராக நியமித்தார்.

இந்நிலையில், பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக்கோரியும், கட்சியின் தலைவராக தம்மை அறிவிக்கக் கோரியும் ராமதாஸ் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமதாஸ் மனு குறித்து அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT