சென்னை: பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் மீதான கொலை முயற்சி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இடைக்காலத்தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சவுக்கு மீடியா சிஇஓ-வான யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சைதாப்பேட்டை மற்றும் ஆதம்பாக்கம் போலீஸார் பதிவு செய்திருந்த இரு குற்ற வழக்குகளில் அவருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.
ஆனால். அவர் ஜாமீன் கெடு முடிந்த பிறகும் நீதிமன்றத்தில் சரணடையவில்லை என்பதால் அவரை போலீஸார் ஆந்திராவில் வைத்து கடந்த ஏப்.8-ம்
தேதி கைது செய்து புழல் சிறைக்கு கொண்டு வந்தனர்.
போலீஸ் வாகனம் புழல் அருகே வந்தபோது மற்றொரு வாகனத்தில் அங்கு வந்த 4 பேர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சவுக்கு சங்கர் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தன் மீது போடப்பட்டுள்ள இந்த பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பதிலளிக்க அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
அதையேற்ற நீதிபதி, விசாரணையை ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.அதுவரை இந்த வழக்கில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்துஉத்தரவிட்டுள்ளார்.