தஞ்சாவூர்: தஞ்சாவூரில் போலீஸாரை தாக்கியதாக கைதான இளைஞரும் அவருக்கு ஆதவராக பேசியவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
தஞ்சாவூரில் விசிகவினர் ஆக.17-ம் தேதி மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த விளாரைச் சேர்ந்த ஆகாஷ் (26), தான் வேலைக்கு செல்ல வழிவிட வேண்டும் என்று தெரிவித்து, விசிகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அங்கு வந்த சிறப்பு எஸ்ஐ அப்துல் ரஹீம், ஆகாஷ் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆகாஷை எஸ்எஸ்ஐ அப்துல் ரஹீம் கன்னத்தில் அறைந்துள்ளார். அதற்கு பதிலுக்கு ஆகாஷூம் அப்துல் ரஹீமை தாக்கியுள்ளார். இதையடுத்து ஆகாஷையும், அவருக்கு ஆதரவாக பேசிய திருக்கானூர்பட்டி அய்யப்பன் என்பவரையும் போலீஸார் காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. வேலைக்கு போவதற்கு வழிவிடுங்கள் என்று கேட்ட இளைஞரை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி இருந்தால் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டு இருக்காது. இந்த விவகாரத்தில் முதலில் அடித்தது போலீஸார்தான், அதனால் தான் அவர் திருப்பி அடித்தார்.
இதில், எஸ்எஸ்ஐ-யை அடித்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யும்போது, இளைஞரை தாக்கிய எஸ்எஸ்ஐ மீது ஏன் வழக்குப் பதியவில்லை என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், ஆகாஷ், அய்யப்பன் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு, தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதில், ஆகாஷ் விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்றவர்கள் பேசுவதை கவனத்தில் கொள்ளாமல் பேசுபவர் என்றும், கவனச் சிதைவு ஏற்படும் நிலையை உடையவர் என்றும் ஜாமீன் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அவர்களை ஜாமீனில் விடுவிக்க எவ்வித ஆட்சேபமும் இல்லை என நீதிபதியிடம் போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரையும் ஜாமீனில் விடுவித்து நீதிபதி கனிமொழி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
மார்க்சிஸ்ட் கண்டனம்
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் கூறியிருப்பதாவது: தஞ்சாவூரில் இளைஞரை தாக்கியவர்கள் காவலர்களா, கொலைகாரர்களா, பொது வெளியில் இப்படி என்றால் காவல் நிலையத்தில் எப்படி நடந்து கொள்வார்கள், அரசு சம்பந்தப்பட்ட காவலர்களை பணியிடை நீக்கம் செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.