தமிழகம்

அமைச்சர் சேகர்பாபுவை அவதூறாக பேசியதாக போலீஸ் தேடும் நபருக்கு முன்ஜாமீன்!

கி.மகாராஜன்

மதுரை: சுசீந்திரம் கோயில் தேர் திருவிழாவில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபுவை அவதூறாக பேசிய வழக்கில் போலீஸார் தேடி வரும் நபருக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

சுசீந்திரத்தை சேர்ந்த கிரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் ஜன.2-ல் தேர் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். தேர் ஓடத் தொடங்கியதும் பக்தர்கள் பாரத் மாதா கி ஜே, ஹர ஹர மகாதேவா என கோஷம் எழுப்பினர். இதை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அவருடன் வந்தவர்கள் கண்டித்தனர்.

          

இதனால் அங்கு இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்றப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபுவை அவதூறாக பேசியதாக என் மீது சுசீந்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் என்னை போலீஸார் தேடி வருகின்றனர். வழக்கில் கைதாகாமல் இருக்க எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மனுதாரர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது.

பின்னர் நீதிபதி, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் வாரம் ஒரு நாள் சுசீந்திரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT