சென்னை: இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், கந்தசாமி மற்றும் விஜயகார்த்திகேயன் ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்க தாமதம் செய்வது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத் தரப்பில், ‘வழக்கு தொடர அனுமதி வழங்கக் கோரி தமிழக அரசு அனுப்பிய விளக்கம் கடிதம் ஜூலை 28-ம் தேதி கிடைக்கப் பெற்றது. அதன்மீது பரிசீலனை நடந்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசுத் தரப்பில், ‘இது தொடர்பாக ஆகஸ்ட் 27-ம் தேதி நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ‘ஊழல் வழக்கில் அனுமதி வழங்க தாமதம் ஏற்படுத்துவது ஏன்? இந்தியர்கள் ஊழலுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. இதுபோன்ற வழக்கில் இருந்துதான் முடிவுக்கு வரவேண்டி உள்ளது.
ஓர் ஊழல் வழக்கில் ஒப்புதல் பெறுவதற்கு நீதிமன்றம் எவ்வளவு வற்புறுத்த வேண்டியுள்ளது. இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது. அனுமதி பெறுவதற்கே இவ்வளவு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ள சூழலில், இதற்குபின் இந்த வழக்கில் என்ன நடக்கும் என கடவுளுக்குத்தான் தெரியும்’ என அதிருப்தி தெரிவித்தார்.
பின்னர், இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர ஒப்புதல் வழங்க தாமதம் ஏற்பட்டது ஏன் என்பது குறித்தும், ஒப்புதல் கோரிய கடிதத்தின் தற்போதைய நிலை என்ன என்பதையும் காணொலி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்க மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை சார்பு செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.