தமிழகம்

கச்சநத்தம் கோயில் திருவிழா மோதல் கொலை - 26 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்!

கி.மகாராஜன்

மதுரை: கச்சநத்தம் கோயில் திருவிழாவில் முதல் மரியாதை அளிப்பது தொடர்பான மோதலில் மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணை நீதிமன்றம் 26 பேருக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கோயில் திருவிழாவில் முதல் மரியாதை அளிப்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே 2018-ல் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக ஆயுதங்களுடன் ஒரு கும்பல் மற்றொரு தரப்பினர் வசிக்கும் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் சண்முகநாதன், ஆறுமுகம், சத்திரசேகர் ஆகியோர் உயிரிழந்தனர். மோதலில் காயமடைந்த தனசேகரன் 2020-ல் இறந்தார்.

          

இந்த கொலை தொடர்பாக பழையனூர் போலீஸார் 33 பேரை கைது செய்தனர். இதில் இருவர் விசாரணை நிலுவையில் இருந்தபோது இறந்தனர். 3 சிறுவர்கள், தலைமறைவாக ஒருவர் தவிர்த்து 27 பேர் மீதான வழக்கை விசாரித்த சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.

தண்டனையை ரத்து செய்யக்கோரி 27 பேரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். மேல்முறையீடு மனுவை நீதிபதிகள் ஜி.கே.இளந்திரையன், ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்ட 27 பேரில் இளையராஜா என்பவரை மட்டும் விடுதலை செய்தும், 26 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தும் நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT