சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: தலைமை ஆசிரியைக்கு கடந்த 2012 முதல் வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியம் மொத்தம் ரூ.8.34 லட்சத்தை திருப்பிச் செலுத்துமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா பெரம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை எம்.கலா. கடந்த 1996-ல் இடைநிலை ஆசிரியையாக பணியில் சேர்ந்த இவர், 2007-ல் தலைமை ஆசிரியையாகப் பதவி உயர்வு பெற்றார். தமிழக அரசாணைப்படி, முதுகலைப் பட்டம் பெற்ற இவருக்கு கடந்த 2012 டிச.29 முதல் இரட்டை ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தொலைதூர பல்கலைக்கழகம் மூலம் எம்ஏ பட்டம் பெற்றவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு ரத்து செய்து கடந்த 2013-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கலாவுக்கு வழங்கப்பட்ட ரூ.8.34 லட்சத்தை திருப்பி வசூலிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் ஆக.14-ம் தேதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கலா தொடர்ந்து வழக்கு நீதிபதி மும்முனேனி சுதீர்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, ஊக்க ஊதியத்தை திருப்பிச் செலுத்துமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி, விசாரணையை டிச.3-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.