ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி விபத்துக்குள்ளான கார்.

 
தமிழகம்

ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீரில் கார் மூழ்கி தம்பதி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சேலம் / ஈரோடு: சேலம் மாவட்​டம் ஓமலூர் அருகே ரயில்வே சுரங்​கப் பாதை​யில் தேங்​கி​யிருந்த மழை நீரில் கார் மூழ்​கிய​தில் வயதான தம்​பதி உயி​ரிழந்​தனர். சேலம் சின்​னத்​திருப்​ப​தி​யைச் சேர்ந்த தம்​பதி வெங்​க​டாசலம் (73), ராதா (63).

இவர்​களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்​ளனர். அரசுப் போக்​கு​வரத்​துக் கழகத்​தில் மேலா​ள​ராக பணி​யாற்றி ஓய்வுபெற்ற வெங்​க​டாசலத்​தின் மகன் அமெரிக்​கா​விலும், மகள் கோவை​யிலும் வசிக்​கின்​றனர். சின்​னத்​திருப்​ப​தி​யில் தம்​பதி தனி​யாக வசித்து வந்​தனர்.

நேற்று முன்​தினம் இரவு ஓமலூர் சுற்​று​வட்​டாரத்​தில் கனமழை பெய்​தது. ஓமலூர் அருகே செம்​மாண்​டப்​பட்​டி, ஏனாதி கிராமம் வழி​யாகச் செல்​லும் ரயில்வே சுரங்​கப்​பாதை​யில் குளம்போல மழைநீர் தேங்​கி​யுள்​ளது.

ஓமலூர் சின்​னத்​திருப்​ப​தி​யில் நடை​பெறும் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க வெங்​க​டாசலம், ராதா நேற்று அதி​காலை 5 மணிக்கு காரில் சென்​றுள்​ளனர்.

செம்​மாண்​டப்​பட்டி ஏனாதி ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்​கி​யிருந்த நிலை​யில், வெங்​க​டாசலம் காரில் சுரங்​கப் பாதையை கடக்க முயன்​றார்.

அப்​போது, மழைநீரில் கார் மூழ்​கியது. கார் லாக் ஆனதால், தம்​பதி வெளி​யேற முடிய​வில்​லை. குளம்​போல தேங்​கி​யிருந்த மழை நீரில் கார் முழு​மை​யாக மூழ்​கிய​தால், தம்​ப​தி​யர் காருடன் நீரில் மூழ்கி உயி​ரிழந்​தனர்.

நேற்று காலை அந்த வழி​யாகச் சென்ற கிராம மக்​கள், ரயில்வே சுரங்​கப் பாதை​யில் கார் மூழ்​கி​யிருந்​ததைப் பார்த்து ஓமலூர் போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர். போலீ​ஸார் சம்பவ இடம் வந்து ரயில்வே சுரங்​கப் பாதை​யில் மூழ்​கி​யிருந்த காரை வெளியே எடுத்​தனர்.

அப்​போது, காருக்​குள் வெங்​க​டாசலம், ராதா ஆகியோர் உயி​ரிழந்து இருந்​தனர். இரு​வரின் உடலை​யும் மீட்​டு, பரிசோதனைக்​காக சேலம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

மேலும், சம்​பவம் குறித்து போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். சேலம் மாவட்​டத்​தில் உள்ள ரயில்வே சுரங்க பாதைகளில் மழைக் காலங்​களில் மழை நீர்தேங்கி வரு​வது வழக்​க​மாக உள்​ளது.

இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் அதுவரை மோட்​டார் பம்ப் மூலம் சுரங்​கப் பாதை​யில் தேங்​கும் மழைநீரை அதி​காரி​கள் வெளி​யேற்​று​வதன் மூலமும் இது​போன்ற விபத்து சம்​பவங்​கள் நடக்​காமல் தடுக்க முடி​யும் என அப்​பகுதி மக்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

சிறு​வன் உயி​ரிழப்பு

ஈரோடு மாவட்​டம் தாள​வாடி அருகே உள்ள திக​னாரை கிராமத்​தைச் சேர்ந்த ரங்​க​ராஜ் மகன் கார்த்​திக் (6). அங்​குள்ள அரசு உதவி பெறும் பள்​ளி​யில் 2-ம் வகுப்பு படித்து வந்​தார்.

மழை காரண​மாக நேற்று முன்​தினம் இரவு அங்​குள்ள ஓடை​யில் காட்​டாற்று வெள்​ளம் பெருக்​கெடுத்து ஓடியதை கார்த்​திக் வேடிக்கை பார்த்​துக் கொண்​டிருந்​தான். பின்​னர் அவன் வீடு திரும்​ப​வில்​லை.

வெள்ளத்தில் சிறுவன் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின்பேரில் ஆசனூர் தீயணைப்​புத் துறை​யினர் மற்​றும் போலீ​ஸார் ஓடை​யில் தேடும்​பணி​யில் ஈடு​பட்​டனர்.

நேற்று காலை அதே பகு​தி​யில் ஓடை​யில் உயி​ரிழந்த நிலை​யில் சிறு​வனின் உடலை தீயணைப்​புத் துறை​யினர் மீட்​டனர்​. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT