தமிழகம்

“திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப ‘கவுன்டன்’ தொடங்கிவிட்டது” - வானதி சீனிவாசன்

செய்திப்பிரிவு

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப'கவுன்டவுன்' தொடங்கி விட்டது என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

          

திமுகவின் ஊழல், குடும்ப, மாஃபியா ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற பிரதமரின் அறைகூவல் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப கவுன்டவுன் தொடங்கி விட்டது.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 'டபுள் இன்ஜின்' அரசு அமைவது உறுதி என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 'இண்டியா' கூட்டணிக் கட்சிகளையும், குறிப்பாக முதல்வர் ஸ்டாலினையும் கலக்கமடைய வைத்துள்ளது.

அதன் வெளிப்பாடு தான் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட உடனடி அறிக்கை. தமிழ்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு 1998 முதல் 2004 வரை பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியில் அமைக்கப்பட்ட தங்க நாற்கரச் சாலை போன்ற உள்கட்டமைப்பு வசதிகள்தான் காரணம். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தான் சென்னையைச் சுற்றி வாகன உற்பத்தி, எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைகள் அதிகம் வந்தன.

அவரது ஆட்சியில் அமைக்கப்பட்ட 'டைடல் பூங்கா' தான், தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. கடந்த 11 ஆண்டுகால மோடி ஆட்சியில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், புதிய ரயில்கள், விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசு பெரும் பங்களித்துள்ளது. இதை தமிழ்நாட்டு மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள், என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT