சென்னை: நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மீது மீண்டும் ஊழல் குற்றச்சாட்டுடன் டிஜிபிக்கு அமலாக்கத் துறை இரண்டாவது கடிதத்தை அனுப்பி உள்ளது.
அமலாக்கத் துறை கடந்த அக்.27-ம் தேதி தமிழக டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது: சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தின் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக சோதனைகள் நடத்தியதில் நகராட்சி நிர்வாகத் துறையில் அரசுப் பணி நியமனத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பான ஆவணமும் சிக்கியது.
அந்தவகையில், 2,538 பேரில் 150 பேரிடம் பணியின் தன்மையை பொருத்து தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெற்றதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. இதில் அதிகாரமிக்க அரசியல்வாதிகளும், அவர்களுக்கு நெருக்கமான நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான ஆவணங்களை, 232 பக்க கடிதத்துடன் இணைத்துள்ளோம். இந்த முறைகேடு தொடர்பான விசாரணையை விரைவில் டிஜிபி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் ரூ.888 கோடி லஞ்ச ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை துறையின் அமைச்சர் கே.என்.நேரு மறுத்தார். இந்நிலையில், தலைமைச் செயலர் மற்றும் டிஜிபிக்கு, தற்போது மீண்டும் ஒரு கடிதத்தை அமலாக்கத் துறை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியானது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் வழங்கப்பட்ட டெண்டர்களில், ஒப்பந்ததாரர்களிடம் இருந்து மொத்த ஒப்பந்த மதிப்பில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அமைச்சர் கே.என்.நேரு, தனது உறவினர்கள் மூலம் வசூலித்துள்ளதாக அமலாக்கத் துறை அதில் குற்றம்சாட்டியுள்ளது.
அதிலும், ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்படுவதற்கு முன்பு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சப் பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அமைச்சர் நேருவின் விருப்பத்துக்கு ஏற்ப ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக டெண்டர்கள் மாற்றியமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், ரூ.1,020 கோடி லஞ்சப் பணம் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் சென்றடையாமல், கட்சி நிதியாகவும் வசூலிக்கப்பட்டுள்ளதாக கடிதத்தில் தெரிவித்து, 252 பக்க ஆவணத்தை கடிதத்துடன் அமலாக்கத் துறை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் ஆவணங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், வங்கிக்கணக்கு விவரங்கள், லஞ்சத்தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் போன்ற ஆதாரங்கள் உள்ள தாக கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு காவல் துறையும் உடந்தையாக இருக்கிறது என அமலாக்கத் துறை முடிவுக்கு வரும். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மீது ஒப்பந்த மோசடி, பணி நியமன மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளை அமலாக்கத் துறை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘சட்டப்படி எதிர்கொள்வேன்’ - அமைச்சர் கே.என்.நேரு நேற்று வெளியிட்ட அறிக்கை விவரம்: திமுக அரசின் சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகளின் வரிசையில், அமலாக்கத் துறையும் சேர்ந்து கொண்டு, என்னை குறிவைத்து தொடர்ந்து அவதூறில் ஈடுபட்டுவருவது கண்டனத்துக்குரியது.
கடந்த 5 ஆண்டுகளில் எனது துறையின்கீழ் 24,752 கி.மீ. சாலைகள் போடப்பட்டுள்ளன. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 1.22 கோடிக்கும் மேற்பட்டோருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதிமுக- பாஜக கூட்டணியின் தூக்கத்தை இந்த அரசின் சாதனைகள் கலைத்துவிட்டன. குறிப்பாக, பாஜகவை இந்த சாதனைகள் ரொம்பவே மிரட்டுகின்றன.
2013-ல் வாங்கிய கடனை வைத்து என் சகோதரர் மீது போடப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம், எந்த குற்றமும் நடக்கவில்லை என ரத்து செய்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ஏற்கெனவே உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. ஆனாலும், அமலாக்கத் துறையை மீண்டும் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடச் சொல்லி பாஜக நிர்பந்திக்கிறது. என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன். மக்கள் பணியாற்ற வந்துள்ள நாங்கள் மத்திய அரசின் தூண்டுதலில் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடும் அமலாக்கத் துறைக்கோ, அவதூறுப் பிரச்சாரத்துக்கோ அஞ்சமாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.