சென்னை: மாநகராட்சி வாட்ஸ்-அப் சேவை வழியாக, குடிநீர், கழிவுநீர் கட்டணங்கள், வரிகளை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி, பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு குடிமை சேவைகளை இணையதளம் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் வழங்கி வருகிறது.
சொத்து வரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் சேவைகள், புகார் பதிவு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட 42 சேவைகளுடன், தற்போது சென்னை குடிநீர் வாரியத்தின், குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களையும் வாட்ஸ்-அப் வழியாக செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்-அப் சாட்பாட் எண் 9445061913 மூலம் தங்களது சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்களை எளிதாகவும், பாதுகாப்பாகவும் செலுத்தலாம்.
மேலும், கட்டண விவரங்கள், நிலுவைத் தொகைகள் மற்றும் ரசீதுகளையும் உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம். இச்சேவைகள் மூலம் பொதுமக்கள் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் குறைவதுடன், நேரமும், செலவும் சேமிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் இந்த சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.