சென்னை: வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகரில் உள்ள நீர்நிலைகள் அனைத்திலும் தூர்வாரும் பணிகளை செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று மண்டல கண்காணிப்பு அலுவலர்களுக்கு நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணித்து உரிய மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மண்டல கண்காணிப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆஷிஷ் சட்டர்ஜி, மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் சென்னை குடிநீர் வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ் சாலைத் துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை. மின்சாரத்துறை, ரயில்வே, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, காவல் துறை, சிஎம்டிஏ உள்ளிட்ட தொடர்புடைய சேவைத் துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ககன் தீப் சிங் பேடி பேசியதாவது: மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள நீர்வழிக் கால்வாய்கள், ஆறுகள், நீர்நிலைகள், மழைநீர் வடிகால்கள், வண்டல் வடிகட்டித் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் தூர்வாரும் பணிகளையும், மேம்பாட்டுப் பணிகளையும் கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணித்து செப்டம்பர் மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு மண்டலத்திலும் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் நீரை வெளியேற்றுவதற்கு தேவையான மோட்டார் பம்புகள் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வடகிழக்குப் பருவமழை மற்றும் எல்நினோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ரூ.100 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
215 வெள்ள நிவாரண மையங்கள் மற்றும் 111 சமையல் கூடங்களை ஆய்வு செய்து, தேவையான வசதிகளை மேற்கொண்டு ஆயத்த நிலையில் வைக்க வேண்டும். மழைக் காலங்களில் மீட்பு நடவடிக்கைகளுக்காக 1000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளனர். குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 721 பேர் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.