கோப்புப் படம்
சென்னை: மாநகராட்சி சார்பில் கொடுங்கையூர், பெருங்குடி, அத்திப்பட்டு குப்பை கொட்டும் வளாகங்களில் பயோ- மைனிங் முறையில் பழைய குப்பைகளை அகழ்ந்தெடுத்து, அந்த நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் 350 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இதில் பயோமைனிங் தொழில்நுட்பத்தின் மூலம் அகற்றப்பட வேண்டிய 66,52,506 டன் பழைய கழிவுகளில், இதுவரை சுமார் 47,85,993 டன் (72%) அகற்றப்பட்டுள்ளன.
இதன் மூலம் சுமார் 22 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த ஆண்டு மே மாதம் நிறைவடையும். அங்கு மொத்தமாக 200 ஏக்கர் நிலம் மீட்டெக்கப்படும்.
அத்துடன், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கூடுதலாகக் கண்டறியப்பட்டுள்ள 12.13 லட்சம் டன் மரபுக் கழிவுகளைப் பயோமைனிங் முறையில் அகற்றுவதற்கான திட்டம் ரூ.116.89 கோடியில் மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகம் 250 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இதில் முதல் கட்டமாக 29,28,398 கன மீட்டர் கழிவுகளும் (100%) முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 96 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
அங்கு நடைபெறும் 2-ம் கட்ட பணியில் பயோமைனிங் தொழில்நுட்பம் மூலம் அகற்றப்பட வேண்டிய 5,50,000 டன் கழிவுகளில் இதுவரை சுமார் 1,08,073 டன் (20%) கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இத்திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைடையும். அங்கு சுமார் 75 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்படும்.
அத்துடன், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் கூடுதலாகக் கண்டறியப்பட்டுள்ள 16.50 லட்சம் டன் கழிவுகளைப் பயோமைனிங் முறையில் அகற்ற ரூ.158.93 கோடியில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அத்திப்பட்டு குப்பை கொட்டும் வளாகம் 5.5 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. அங்கு முதற்கட்டமாக பயோமைனிங் தொழில்நுட்பத்தில் 1,07,811 கன மீட்டர் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.
2-ம் கட்ட பணியில், 72,083 டன் மரபுக் கழிவுகளில், இதுவரை சுமார் 64,263 டன் அகற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 5.5 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.