சென்னை: மாநகராட்சி மாமன்றக் கூட்டம், 3 மாதங்களுக்கு பிறகு வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம், மாதம்தோறும் நடைபெறுவது வழக்கம்.
இதில், சென்னை மாநகரப் பகுதியில் செயல்படுத்த உள்ள திட்டங்களுக்கான அனுமதி, முக்கிய திட்டங்களுக்கு அரசின் அனுமதி கோருவது, அரசின் முக்கிய அரசாணைகளை மாநகராட்சியில் செயல்படுத்த அனுமதி கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசுவார்கள். அதற்கு மேயர் மற்றும் அதிகாரிகள் பதில் அளிப்பார்கள். இந்த கூட்டம் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அப்போது மாநகராட்சி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மார்ச் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், 2 மாதங்களாக மாமன்றக் கூட்டம் நடைபெறவில்லை. தேர்தல் முடிந்து தவெக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில், கடந்த மே மாதத்திலும் மாமன்றக் கூட்டம் நடைபெறவில்லை.
மாநகராட்சியின் 200 கவுன்சிலர்களில் 152 பேர் திமுகவை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 20-ல் தொகுதிகளில் தவெக எம்எல்ஏக்களே வெற்றி பெற்றுள்ளனர் புதிய ஆட்சி அமைந்த பிறகு, முதல்வர் விஜய்யை, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்திக்கவில்லை என்ற சர்ச்சை இருந்து வருகிறது.
புதிய அரசின் அனுமதியில்லாததால், மாமன்றக் கூட்டம் நடைபெறவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இம்மாதம் 24-ம் தேதி காலை 10 மணிக்கு மாமன்ற கூட்டம் நடைபெற உள்ளது.
தவெக தலைமையில் புதிய ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் கூட்டம் என்பதால், இக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழகத்தின் பல்வேறு உள்ளாட்சிகளில் நடைபெற்ற மன்ற கூட்டங்களில், தவெக எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றதால், திமுக மற்றும் தவெகவினர் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இந்த மாமன்ற கூட்டத்தில், சுவாரஸ்யங்களுக்கு பஞ்சம் இருக்காது என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.