டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்த நயினார் நாகேந்திரன்.

 
தமிழகம்

கோவையில் மையக்குழு கூட்டம் நிறைவு: நயினார் நாகேந்திரன் டெல்லியில் முகாம்

பாஜக தேசிய தலைவர்களுடன் சந்திப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கோவையில் பாஜக மையக்குழு கூட்டம் முடிந்த நிலையில், டெல்லியில் முகாமிட்டுள்ள மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆராய பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், கடந்த 20-ம் தேதி கோவைக்கு வருகை தந்தார்.

2 நாட்கள் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் மற்றும் மேலிடப் பொறுப்பாளர்கள் என முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.

தேர்தல் தோல்வி மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில் திமுகவுடன் பாஜக கூட்டணிவைக்குமா என்ற குரல்கள் எழத் தொடங்கியுள்ள நிலையில்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ‘திமுக எப்போதும் பாஜகவின் கொள்கை எதிரிதான். கூட்டணி குறித்து வரும் காலங்களில் முடிவெடுக்கலாம், இப்போது மக்கள் பணியில் கவனம் செலுத்துங்கள்’ என நிர்வாகிகளுக்கு மேலிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இக்கூட்டத்தில் பி.எல்.சந்தோஷ் பேசும்போது, ‘‘விஜய்யின் அரசியல்நகர்வுகளில் தவறுகள் இருந்தால் தாராளமாகத் தட்டிக்கேட்கலாம்.

ஆனால், விஜய் மீதோ அல்லது அவரது கட்சியினர் மீதோ தனிப்பட்ட முறையிலான விமர்சனங்களையோ, தரம் தாழ்ந்த தாக்குதல்களையோ எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது’’ என நிர்வாகிகளுக்குக் கட்டளையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் தவெக-வைக் கையாளுவதில் பாஜக ஒரு நிதானமான அணுகுமுறையைக் கடைபிடிப்பது தெரிகிறது. இதற்கிடையே கோவையில் ஆலோசனை முடிவடைந்த கையோடு, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று டெல்லி சென்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்து தேர்தல் தோல்வி குறித்து விளக்கம் அளித்ததாகத் தெரிகிறது.

அதைத் தொடர்ந்து, அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் இதர தேசியத் தலைவர்களையும் சந்தித்து தமிழக பாஜகவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT