தமிழகம்

அரசு மருத்துவமனையில் தவெக பிரமுகர்கள் ஆய்வால் சர்ச்சை

செய்திப்பிரிவு

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை மற்றும் கடையநல்லூர் அம்மா உணவகத்தில் தவெக நிர்வாகிகள் ஆய்வு செய்தது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கல்குவாரியில் வேலை பார்த்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் இயந்திரத்தில் சிக்கியதில் அவரது கை துண்டானது. சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவர் போல் வெள்ளை கோட் அணிந்துகொண்டு வந்த தவெக மருத்துவ அணி பெண் பிரமுகர் மற்றும் நிர்வாகிகள் சிலர், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சென்று இந்த சப்மவம் தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளனர்.

மேலும் அவர்கள், பணியில் இருந்த மருத்துவர்களிடம் மருத்துவமனையில் உள்ள வசதிகள், தேவைப்படும் வசதிகள், பணியாளர்கள் விவரங்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்துள்ளனர். இதேபோல், கடையநல்லூரில் உள்ள அம்மா உணவகத்தை தவெக நிர்வாகிகள் பார்வையிட்டு, அம்மா உணவகத்தில் உள் கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள், குடிநீர் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்துள்ளனர்.

இந்நிலையில், மக்கள் பிரதிநிதிகளாக இல்லாத கட்சி நிர்வாகிகள் அரசு மருத்துவமனை, அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு மருத்துவமனை, அம்மா உணவகத்தை கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்ய அதிகாரம் அளித்தது யார்? இந்த ஆய்வுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளித்தது ஏன்? என்று சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ஆய்வுக்கு சென்றவர்கள் மற்றும் அவர்களை ஆய்வு செய்ய அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT