சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ரமேஷ்

 
தமிழகம்

அரசியல் விமர்சனங்களுக்காக கைது செய்வது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல: சென்னை உயர் நீதிமன்றம்

முதல்வர் குறித்த கருத்து - திமுக பெண் கவுன்சிலருக்கு முன்ஜாமீன்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ‘உயர் பதவிகளில் இருப்பவர்கள் அரசியல் ரீதியாக எழும் விமர்சனங்களையும், கேலிகளையும், எதிர்ப்புகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். விமர்சனங்களுக்கு கைது நடவடிக்கையைப் பயன்படுத்துவது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல’ என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், இழிவாகவும் பேசிய குற்றச்சாட்டில் திமுக கவுன்சிலர் சுதா மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்த நிலையில், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி 95-வது வார்டு திமுக கவுன்சிலரும், மகளிர் அணி நிர்வாகியுமான டி.சுதா, கடந்த அக்.7-ம் தேதி சென்னை - ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த திமுக முப்பெரும் விழாவில், தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், இழிவாகவும் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக எஸ்பிளனேடு போலீஸார் திமுக கவுன்சிலர் டி.சுதா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், தனக்கு முன்ஜாமீன் கோரி சுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.ரமேஷ் முன்பாக நடந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அ.தாமோதரன், ‘மனுதாரருக்கு தற்போது 60 வயதாகிறது. இதற்கு முன்பாக அவர் மீது எந்த குற்ற வழக்கும் நிலுவையில் இல்லை. முதல்வர் குறித்த தனது பேச்சுக்காக அவர் ஏற்கெனவே வருத்தம் தெரிவித்துவிட்டார். எதிர்காலத்திலும் கவனத்துடன் பேசுவதாக உறுதியளித்துள்ளார்’ என்றார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.ரமேஷ் பிறப்பித்துள்ள விரிவான உத்தரவின் விவரம்:

‘அரசியல் ரீதியிலான விமர்சனங்களுக்கும், பேச்சுரிமைக்கும் அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள பாதுகாப்பை புறம்தள்ளி, கைது நடவடிக்கையை ஒரு தண்டனை வழங்கும் கருவியாக ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அரசியல் ரீதியாக எழும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் காவல் துறையை ஆயுதமாக்கி கைது நடைமுறையை மேற்கொள்ளக்கூடாது.

ஆட்சியில் இருப்பவர்களின் செயல்பாடுகளை விமர்சிப்பதும், கேள்வி எழுப்புவதும் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம். அரசியல் தலைவரை விமர்சிப்பது அல்லது அவதூறாக பேசுவது மட்டுமே பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றமாகி விடாது. அந்த பேச்சு வன்முறையை தூண்டும் விதத்தில் உண்மையிலேயே பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தினால் மட்டுமே அதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பேச்சுரிமைக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பு சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

முதல்வர் குறித்து மனுதாரர் அவதூறாக பேசியிருந்தால் அதற்காக அவதூறு வழக்கு தொடரலாம். அதை விடுத்து அரசியல் உள்நோக்கத்துடன் வேறு குற்றப்பிரிவுகளை பயன்படுத்தி போலீஸார் நடவடிக்கை எடுப்பது சட்ட நடைமுறைகளை தவிர்ப்பது போலாகிவிடும்.

தற்போதுள்ள சூழலில், நாட்டில் மட்டுமின்றி தமிழகத்திலும் அரசியல் விவாதங்கள் பெருமளவில் சமூக வலைதளங்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் சமூக வலைதளப் பிரிவுகளை நிர்வகித்து வருகின்றனர். இந்த சமூக வலைதளப்பிரிவு, எதிர்க்கட்சியினரை விமர்சிப்பதும், கேலி, கிண்டல் செய்வதும், அவதூறாகப் பேசுவதும் தொடர்கதையாக உள்ளது.

ஆனால், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான புகார்களிலும், எதிர்க்கட்சியினருக்கு எதிரான புகார்களிலும் காவல்துறை ஒரே மாதிரியான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். காவல்துறை அரசுக்குத்தான் சேவை செய்கிறதேயன்றி, ஆளுங்கட்சிக்கு சேவை செய்யவில்லை. குறிப்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்த பாகுபாடும் இன்றி காவல்துறை செயல்பட வேண்டும்.

அதேபோல ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு காணொலியாகவும் ஆவணமாகவும் உள்ள பேச்சு தொடர்பான வழக்குகளில், விசாரணைக்காக மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. யாரையோ திருப்தி படுத்தும் நோக்கில் கைது நடவடிக்கை இருக்கக்கூடாது.

எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டால் சில மணி நேரங்களிலேயே போலீஸார் நடவடிக்கை எடுக்கின்றனர்.

ஆனால் அதுவே ஆளுங்கட்சியினர் என்றால் வழக்குப் பதிவு செய்வது கூட இல்லை என்ற குற்றச்சாட்டு ஒவ்வொரு ஆட்சியின்போதும் எழுந்து கொண்டிருக்கிறது. போலீஸாரின் நடவடிக்கைகளை பொதுமக்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையே காவல் துறை ஒரே மாதிரியான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது என்பது காவல் துறை வழங்கும் சலுகையோ, மரியாதையோ அல்ல. அது அரசியலமைப்பு சட்ட ரீதியாக காவல்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள அடிப்படை நிபந்தனையாகும்.

ஆளுங்கட்சி எம்எல்ஏ குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான கருத்து பதிவிட்டதாகக் கூறி சமீபத்தில் அதிகாலை நேரத்தில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஒருவர் சாதாரண உடையில் வந்த போலீஸாரால் அழைத்து செல்லப்பட்டார். அந்த சமூக வலைதளப்பதிவு அவரது புகைப்படத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான கணக்கு என்பது தெரிந்ததும் அன்றைய தினமே அவர் விடுவிக்கப்பட்டார்.

அதன்பிறகு அவர் தலைமைச் செயலகத்துக்கு வரவழைக்கப்பட்டு முதல்வருடன் சந்திக்கிறார். தவறு நடந்துவிட்டது என்பதை அமைச்சர் ஒருவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். அதிகாலை வேளையில் ஒருவரை கைது செய்ய முற்படும்போது, அந்த சமூக வலைதளப் பதிவின் உண்மைத் தன்மை குறித்து ஏன் சரிபார்க்கவில்லை. இதற்காக அந்த போலீஸார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

மன்னிப்பு கேட்பது வேறு, தவறுக்கு பொறுப்பேற்பது வேறு. செல்வாக்கும், புகழும் உள்ள ஒருவருக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கலாம். இதுவே சாதாரண குடிமகன் என்றால் அவருக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது. அவர் தவறான புகாரில் கைது செய்யப்பட்டால் சிறை நீதிமன்ற காவல் என நீண்டகால வழக்கு விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்பதை போலீஸார் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்கள் அரசியல் ரீதியாக எழும் விமர்சனங்களையும், கேலிகளையும், எதிர்ப்புகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். விமர்சனங்களுக்கு கைது நடவடிக்கையைப் பயன்படுத்துவது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல.

ஒருவரின் சுதந்திரமான பேச்சுரிமையைப் பறிக்கும் நோக்கில் நீதிமன்றங்கள் நிபந்தனை விதிக்க முடியாது. எனவே, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்குகிறேன். மனுதாரர் சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள 7-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ரூ.25 ஆயிரம் பிணைத்தொகையுடன், அதே தொகைக்கு இருநபர் ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை 10.30-க்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்’ என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT