திருச்சி: இலங்கை காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், டெல்டா மாவட்டங்களில் நவ.28 முதல் டிச.1 வரை தொடர் மழைபெய்யக் கூடும். இதனால் பெரும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ந.செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் அவர் கூறியதாவது: மலேசியா மற்றும் சுமத்ரா இடைப்பட்ட மலாக்கா ஜலசந்தியில் நீடித்த தீவிர தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. இது வங்கக்கடலுக்கு வந்து தீவிரம் அடையும் என்று வானிலை வல்லுநர்கள் கணிப்புக்கு தற்போது வாய்ப்பில்லை.
மாறாக, இலங்கைக்கு தெற்கு, தென்மேற்கு பகுதி மற்றும் தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் கடலில் உள்ள காற்று சுழற்சிகள் இலங்கையின் தென்கிழக்கு முனையை ஒட்டி இன்று (நவ.25) தாழ்வுப் பகுதியாகி, அதே இடத்தில் நீடித்து, தாழ்வு மண்டலம் வரை தீவிரமடைந்து மிகமிக மெதுவாக இலங்கையின் கிழக்கு கரையை ஒட்டியே நவ.26 (நாளை) முதல் நவ.28 வரை வடக்கு நோக்கி நகர்ந்து ஒட்டுமொத்த இலங்கைக்கும் வரலாறு காணாத கடும் வெள்ளம், நிலச்சரிவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
இதனால், நவ.26 பிற்பகல் முதல் டெல்டா மற்றும் தென் கடலோரத்தில் லேசான மழையாக தொடங்கும். நவ.27-ம் தேதி டெல்டாவில் மழை சற்று தீவிரம் அடையும். நவ.28, 29, 30 ஆகிய தேதிகளில் டெல்டா மற்றும் சென்னை, திருவள்ளூர் வரை வடகடலோரப் பகுதிகளுக்கு தொடர் மழைப் பொழிவை கொடுக்கும். இதனால் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் டிச.1-ம் தேதியும் மழை தொடர வாய்ப்புள்ளது. அதேபோல், வட கடலோர மற்றும் வட உள் மாவட்டங்களிலும் கனமழை பொழியும். இந்த மழைய கொடுக்கும் தாழ்வு மண்டலம் கரைக்கு சுமார் 50-75 கி.மீ தொலைவில் நகரும் என்பதால் மிதமான காற்றும் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.