சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பேபியை சந்தித்துப் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அருகில் மார்க்சிஸ்ட் நிர்வாகிகள்.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதி தொடர்பாக இழுபறி நீடிக்கும் சூழலில், மார்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலாளர் பேபி அவசரமாகச் சென்னை வந்து கட்சி நிர்வாகிகளுடன் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கடந்தமுறை தங்களுக்கு ஒதுக்கிய 6 தொகுதிகள் வேண்டும் என சொல்வதாகவும், திமுக 5 தான் கொடுப்போம் என சொல்வதாலும்தான் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், அவரச அவசரமாக சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் பேபி சென்னைக்கு வந்திருந்தார். பிறகு அக்கட்சி அலுவலகத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதன் பின்னணி குறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: செயற்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேபி, ‘இடதுசாரிகளுக்கு நாடாளுமன்றத்தில் 4 எம்.பி.க்களை திமுக கொடுத்திருக்கிறது. இப்போது கொடுக்கும் 5 இடங்களில் வெற்றிபெற வைப்போம் என்கிறார்கள். இந்த நேரத்தில் கூட்டணிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம். அவர்கள் சொல்வது போல 5 இடங்களை வாங்கிக்கொள்ளலாம். அடுத்த முறை கூடுதல் இடங்களை வாங்கிக் கொள்ளலாம்' என்று பேசினார்.
அதற்கு சண்முகம், 'இந்த முறை கூடுதல் தொகுதிகள் தருகிறோம் என்றுதான் ஏற்கெனவே தெரிவித்தார்கள். ஆனால் இப்போது புதிதாக வந்த கட்சிக்கு கூடுதல் இடங்களை கொடுப்பதுடன் நமக்கு 5 சீட்தான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார். இப்படியான சூழலில் வைகோ திடீரென சிபிஎம் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு பேபியை சந்தித்து பேசினார்.
அப்போது, 'நமக்கு பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் முக்கியம். இந்த நேரத்தில் நீங்கள் வேறு முடிவு எடுத்தால் பாஜவுக்குத்தான் வாய்ப்பாக அமையும்' என்று சொல்லியிருக்கிறார். அப்போதும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பிறகு தொடங்கிய மாநிலக்குழு கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாததால் இரவு வரை பேச்சு வார்த்தை பல மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
‘பாவ மன்னிப்பு பாட்டு கேட்டோம்’ - வைகோ விளக்கம்!
முன்னதாக மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பேபியை சந்தித்த வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: பேபி என் மீது எல்லையற்ற அன்பும் வாஞ்சையும் கொண்டவர். எனக்கும் அவருக்கும் ஒரு ஒற்றுமை. அவர் பழைய திரைப்படப் பாடல்களைக் கேட்பது அவருக்கு நேரத்தைச் சற்று போக்குவதற்கான ஒரே ஒரு கருவி. நானும் அப்படித்தான்.
என்னுடைய வாகனத்திலோ, நான் படுத்திருக்கிற அறையிலோ 900 பழைய பாடல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதைக் கேட்டுக்கொண்டே இருப்போம். இப்பொழுது அவரோடு உணவருந்தும்போது கூட அவர் உடனே நான் கேட்ட பாடல்களை… திருவிளையாடல், பாவ மன்னிப்பு, பாசமலர் என எல்லா பாட்டையும் எடுத்துப் போட்டார். ‘நீங்க செம்மீனைப் போடுங்க’ன்னேன். அவர் செம்மீன் பாட்டை எடுத்துப் போட்டார்.
இப்படிப்பட்ட நட்பு எங்களுடையது. அவரை சந்தித்துப் பேசவே வந்தேன்.முன்பு ஹர்கிஷன் சிங் சுர்ஜித், சிபிஎம் பொதுச்செயலாளராக இருந்த போது 20 முக்கிய தலைவர்களை அழைத்துக் கொண்டு என் வீட்டிற்கு வந்து நண்பகல் விருந்து சாப்பிட்டார். அதேபோல நீங்க வரணும்ங்கிற வேண்டுகோளை மட்டும் விடுத்தேன். அரசியல் குறித்து எந்தக் கருத்தும் சொல்லமாட்டேன். இவ்வாறு வைகோ கூறினார்.